அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்றது யார்? என்ன பரிசு?
Alanganallur Jallikattu : காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 17, 2026 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் கையால் கார் பரிசளிக்கப்படவிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
சென்னை, ஜனவரி 17 : காணும் பொங்கலை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் ஜனவரி 17, 2026 அன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. பாரம்பரியமும் வீரமும் கலந்த இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். போட்டியில் பங்கேற்பதற்காக 1,000 காளைகளுக்கும் 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி பல சுற்றுகளாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பார்வையாளர்கள் உட்பட 30 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பரிசு என்ன?
இந்த ஆண்டின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு சிறப்பான பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் படி சிறந்த காளை உரிமையாளருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் முதல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் முதல் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாம் இடம் பெறும் காளை உரிமையாளருக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு, இரண்டாம் இடம் பெறும் மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிள், மூன்றாம் இடம் பெறும் மாடுபிடி வீரருக்கு இ-ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : சென்னை மெரீனா கடற்கரையில் நாளை திருக்குறள் வார இசை நிகழ்ச்சி…பொதுமக்கள் பங்கேற்கலாம்!
வெற்றிபெற்றது யார் தெரியுமா?
பல சுற்றுகளாக நடைபெற்ற கடும் போட்டியின் முடிவில், கருப்பையூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு 18 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் இந்த ஆண்டின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, பூவந்தி பகுதியைச் சேர்ந்த அபிசித்தர், 17 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பெற்றார். பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 11 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் இந்த இருமல் மருத்துக்கு தடை.. குழந்தைகளுக்கு தவறிக்கூட இதை கொடுக்காதீர்கள்!!
போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற வீரர்களை கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உற்சாகமாக பாராட்டினர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் பாரம்பரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசுப் பணிக்கான ஆணை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக நிகழ்வில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், அதிக காளைகளை அடக்கி முதல் இடம் பெறு வீரருக்கு தமிழக கால்நடை பராமரிப்பு துறையில் அரசுப் பணி வழங்கப்படும். மேலும், அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம், உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.