“அதிமுக உஷாராக இருக்க வேண்டும்”… பொதுக்குழுவில் எச்சரித்த சி.வி.சண்முகம்!!
AIADMK General Council meeting: செங்கோட்டையனை போல், அடுத்தடுத்து கட்சியில் முக்கிய தலைவர்கள் பலர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டது. அந்த லிஸ்டிலில், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் முதல் ஆளாக பங்கேற்றுவிட்டனர்.

சி.வி.சண்முகம்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் உறவாடி கெடுப்பவர்களிடம் அதிமுக உஷாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதோடு, 2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என சூளுரைக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக அரசுக்கு எதிரான பரப்புரை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
மேலும் படிக்க: அதிமுக பொதுக்குழுவில் 8 தீர்மானம் நிறைவேற்றம்…அவை என்னென்ன!
பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள்:
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே வழங்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தீர்மானங்களை வாசித்தார். இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பு குரல் வழுத்து வரும் நிலையில், செயற்குழு பொதுக்குழு கூட்டத்தின் மீது அனைத்து கட்சிகளின் கவனமும் இருந்தது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக ஏதேனும் சர்ச்சைகள் எழலாம் என அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு எந்த சுழலும் அங்கு ஏற்படவில்லை.
தவெகவில் இணையும் முக்கிய தலைவர்கள்?
இதனிடையே, செங்கோட்டையனை போல், அடுத்தடுத்து கட்சியில் முக்கிய தலைவர்கள் பலர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டது. அந்த லிஸ்டிலில், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுவிட்டனர். அதோடு, எடப்பாடி தலைமையில் கட்சி வலிமையாக இருப்பதாகவும் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளனர்.
ஆவேசமாக பேசிய சி.வி.சண்முகம்:
அந்தவகையில், பொதுக்குழுவில் ஆவேசமாக பேசிய சி.வி.சண்முகம், கட்சிக்கு வெளியே எதிரிகளும் துரோகிகளும் இருக்கிறார்கள். ஆனால் நம் கூடவே பழகிவிட்டு கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டிய நேரம் என்றார்.
கடந்த சில நாட்களாக நான் தங்கமணி உள்ளிட்டோர் கட்சியை விட்டு வெளியே செல்ல போகிறோம், பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பிரச்சனை ஏற்படுத்துவோம் என்றெல்லாம் பேசினார்கள். இப்போது என்ன நடந்தது? பொதுக்குழுவுக்கு முதல் ஆளாக வந்தது நானும் தங்கமணியும் தான். இது என் கட்சிடா நான் எங்கேயும் போக மாட்டேன்” என ஆவேசமாக பேசினார்.