KA Sengottaiyan: இபிஎஸ் உடன் மோதல்? – செங்கோட்டையன் எடுத்த முடிவு!

Edappadi PalaniSwamy vs KA Sengottaiyan: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், வருகிற செப்டம்பர் 5ம் தேதி காலை 9 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகளின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகிறது.

KA Sengottaiyan: இபிஎஸ் உடன் மோதல்? - செங்கோட்டையன் எடுத்த முடிவு!

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்

Updated On: 

02 Sep 2025 10:49 AM

சென்னை,  செப்டம்பர் 2: வருகிற 2025 செப்டம்பர் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறந்து பேச உள்ளதாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே உள்ள கூட்டணியில் கருத்து வேறுபாடு, கட்சிக்குள் உட்கட்சி பூசல் போன்றவை அடுத்தடுத்து வெளிப்பட்டு அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் மோதல்

குறிப்பாக 2025 பிப்ரவரி 9ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னோடிகளும்,  முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் மேடை உள்ளிட்ட எங்கும் இடம் பெறவில்லை என கூறி அந்த விழாவை  செங்கோட்டையன் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்த நிலையில் கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் பதில் கருத்து தெரிவித்திருந்தார்.

Also Read: AIADMK: இபிஎஸ் குறிவைத்தால் தப்பாது.. கூட்டணிக்கு வராத கட்சிகள் குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்!

மேலும் கடந்த காலங்களில் அதிமுக வைத்த கூட்டணிகள் பற்றியும் அவர் சூசகமாக தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்பு செங்கோட்டையனுக்கான முக்கியத்துவம் கட்சியில் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக அவரது தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.

கட்சி கூட்டத்தில் முடிவு?

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் கோபிசெட்டிபாளையம் வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். அந்த நேரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் தான் செங்கோட்டையன் இருந்தார். அவர் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு கூட அளிக்கவில்லை.

Also Read: திமுக என்றாலே ஊழல்தான்! அது கார்ப்ரேட் கம்பேனி.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். பின்பு கட்சி நிர்வாகிகளுடன் பேசும்போது செப்டம்பர் 5ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் வைத்து மனம் திறந்து பேசுகிறேன் என தெரிவித்தார். அந்த கூட்டத்தில் அவர் பேசப்போவது என்ன மாதிரியான தகவலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.