“ரெய்டுக்கு பயந்து தான் டெல்லி சென்றார்” முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisamy : கடந்த மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல், தற்போது முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது ஏன் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமலாக்கத்துறைக்கு சோதனைக்கு பயந்து தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி சென்றார் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை, மே 25 : அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் முதல்வர் ஸ்டாலில் (MK Stalin) டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் (Niti Aayog Meeting) கலந்து கொண்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (edappadi palanisamy) விமர்சித்துள்ளார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துகளை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் புறக்கணித்தார்.
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
மூன்று ஆண்டுகள் புறக்கணித்த பிறகு, நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டது கருத்தை தெரிவித்துள்ளார். ஏன் மூன்று ஆண்டுகாலம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தமிழகத்திற்கான நிதியை பெற்றிருக்கலாம்.
மாநிலத்தில் நடந்த பிரச்னையை கூட்டத்தில் முன்வைத்திருக்கலாம். இதில் இருந்து மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் என்பது தெரியவருகிறது. இப்போது, அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். மக்களுடைய பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றால், எதற்கு மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.
மக்களுடைய பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றால், எதற்கு மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கருப்பு பலூன் காட்டி எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது, ஆட்சியில் இருக்கும்போது, பிரதமருக்கு வெள்ளை குடை பிடிக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்
டெல்லியில் 2025 மே 24ஆம் தேதியான நேற்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவத் மான், தெலங்கானா முதல்வர் ரெவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மாநில முதல்வர் கலந்து கொண்டனர். மேலும், ஒருசில மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், மாநிலத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார். அதோடு, மாநிலத்திற்கான நிதி பகிர்வில் 50 சதவீதம் தமிழக்ததிற்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அதோடு, பிரதமர் மோடியை தனியாக சந்தித்தும் மீண்டும் தனது கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.