எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி.. இரட்டை இலை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய செங்கோட்டையன்..
Sengottaiyan Letter To ECI: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்,

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 4, 2025: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரையில் நான்கு முக்கியக் கட்சிகள் மோதும் நிலை காணப்படுகிறது. அதில் அதிமுக, திமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி அடங்கும்.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
அதிமுகவைப் பொருத்தவரையில் சமீப காலமாக உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக பாமகாவில் உட்கட்சி விவகாரம் ஏற்பட்டது; அது இதுவரை தீர்வு பெறாத நிலையில் நீடிக்கிறது. அதனைத் தொடர்ந்து அதிமுகவிலும் உட்கட்சி விவகாரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து, எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்திருந்தார்.
மேலும் படிக்க: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
ஆனால் உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேசியதற்காக அவர் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, கட்சியிலிருந்தும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்:
இந்த சூழலில் அக்டோபர் 30, 2025 அன்று தேவர் ஜெயந்தி நாளில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்.. தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்.. வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். காலம் தொட்டு அக்கட்சியில் பணியாற்றி வந்த மூத்த தலைவர் ஆவார். அவரை அதிரடியாக நீக்கியது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தன்னை அதிமுகவிலிருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் செங்கோட்டையன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்:
இந்நிலையில் தற்போது அவர் தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுவுடன் தன்னுடைய மனுவையும் இணைத்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதோடு, தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக அல்ல என்றும், கட்சியின் உண்மை நிலையை நிரூபிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மூலமாக மறைமுகமாக நெருக்கடி உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.