“என் மரணத்திற்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது”.. ராமதாஸின் அதிரவைக்கும் வாக்குமூலம்!
பாமகவை என்னிடம் இருந்து அபகரித்து விட்டனர். எப்போது எனக்கு மரணம் வரும் என ஒரு கூட்டம் காத்திருக்கிறது. மகன், மருமகள், பேத்திகள் கூட அப்படி நினைக்கின்றனர். அன்புமணி நல்ல பிள்ளை இல்லை. ‘எனக்கு மனநிலை சரியில்லை’ என்று கூறுகிறார். என்னுடைய படத்தை அவர்கள் போடக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாமக பலவீனமடையாது என்றார்.

ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்வைத்துள்ள நேரடித் தாக்குதல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குடும்ப உறவுக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலை அவர் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம் சீராகி தைலாபுரம் திரும்பினார். அங்குள்ள தனது இல்லத்தில் நேற்று அவர் தபால் வாக்கு செலுத்தினார்.
மேலும் படிக்க: ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
பொய் பேசுவதில் வல்லவர்:
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று இருந்த எனது குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணியின் மனைவி சவுமியாவைச் சேரும். என் பேத்திகளையும் மயக்கி, மாற்றி விட்டார். “அன்புமணி யார் என்று என்னிடம் கேட்டால், அவர் ஒரு பொய்யர் என்றுதான் சொல்வேன்” எனத் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். அன்புமணி யோசிக்காமல் பொய் பேசுவதில் வல்லவர் என்றும், தனது குடும்பத்தினரையும் அவ்வாறே பழக்கப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
விலைக்கு வாங்கிய அன்புமணி:
கட்சியின் முழு அதிகாரத்தையும் தன்வசப்படுத்த அன்புமணி திட்டமிட்டுச் செயல்படுவதாக குற்றம் சாட்டிய ராமதாஸ், இதற்காக அவர் பல்வேறு ‘வேஷங்கள்’ போட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன்னைப்பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, கட்சியினரிடம் நீண்டகாலமாக இருந்த உண்மையான பாசத்தைத் தகர்த்து, அவர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் கீழ்த்தரமான செயலில் அன்புமணி ஈடுபட்டு வருவதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் கசப்பான அனுபவம்:
தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். அந்தச் சமயத்தில் தனது தொண்டர்களும் பொதுமக்களும் மிகுந்த கவலையுடன் கண்ணீர் விட்டுத் தான் நலம் பெற வேண்டினார்கள் என்று கூறிய அவர், “நான் உயிருக்குப் போராடி மருத்துவமனையில் இருந்தபோது, இந்த பொய்யரோ அல்லது அவரது மனைவியோ, பிள்ளைகளோ நேரில் வந்து பார்க்கவில்லை. ஏன், ஒரு முறை கூட தொலைபேசியில் அழைத்து எப்படி இருக்கிறீர்கள் என்று கூடக் கேட்கவில்லை” என ராமதாஸ் கூறினார். இத்தகைய போக்கு தன்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அன்புமணி நல்ல பிள்ளை இல்லை:
பாமகவை என்னிடம் இருந்து அபகரித்து விட்டனர். எப்போது எனக்கு மரணம் வரும் என ஒரு கூட்டம் காத்திருக்கிறது. மகன், மருமகள், பேத்திகள் கூட அப்படி நினைக்கின்றனர். அன்புமணி நல்ல பிள்ளை இல்லை. ‘எனக்கு மனநிலை சரியில்லை’ என்று கூறுகிறார். என்னுடைய படத்தை அவர்கள் போடக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாமக பலவீனமடையாது என்றார்.
மேலும் படிக்க: ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!
பணப் பேராசையால் பாமகவில் பிளவு:
அதிகாரம் மற்றும் பணத்தின் மீதான பேராசையால் பாமகவில் பிளவு ஏற்பட்டதாக ராமதாஸின் பேரன் முகுந்தன் தெரிவித்துள்ளார். இப்போதும், எப்போதும் நான் மருத்துவர் ராமதாஸின் பக்கம்தான், உண்மையின் பக்கம் தான் நிற்பேன் என்று கூறிய அவர், எம்எல்ஏ சீட் தருவதாக அன்புமணி வாக்குறுதி அளித்ததாகவும், இருந்தாலும் தான் உண்மையின் பக்கம் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன் நியமனத்தில் தான் பிரச்சனை வந்தது, ஊடகங்களுக்கு பேட்டி தராமல் அமைதியாக இருந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.