உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்குமா? தொடரும் பனிமூட்டம்..
Tamil Nadu Weather Update: கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், பிப்ரவரி 16, 2026: பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலின் வழக்குப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலையே இருக்கும்:
இது ஒரு பக்கம் இருக்க, கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 20ஆம் தேதியைப் பொருத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த திசையில் நகரும் என்பதைப் பொறுத்தே தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை மதிப்பிட முடியும்.
அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்:
இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் தொடர்ந்து அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி 19ஆம் தேதி வரை வடதமிழக மாவட்டங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 16ஆம் தேதி இன்று அதிகாலை வரை மிதமான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17ஆம் தேதியைப் பொருத்தவரையில், திருவள்ளூர், சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், பிப்ரவரி 18ஆம் தேதியைப் பொருத்தவரையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், பிப்ரவரி 19ஆம் தேதியைப் பொருத்தவரையில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?
அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலையிலிருந்து ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கும் சசிகலா?.. பிப்.24ல் வெளியாகும் அறிவிப்பு?.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை எடுத்துக் கொண்டால், ஈரோட்டில் அதிகபட்சமாக 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.