Namakkal: காருக்குள் காதலியுடன் திருமணம்.. சரமாரியாக தாக்கிய பெண்ணின் உறவினர்கள்!

நாமக்கல் அருகே காதல் ஜோடி காரில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணின்பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பொறியியல் மாணவிக்கு அவரது காதலன் காரில் தாலி கட்டினார். சம்பவ இடத்தில் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர்.

Namakkal: காருக்குள் காதலியுடன் திருமணம்.. சரமாரியாக தாக்கிய பெண்ணின் உறவினர்கள்!

அஜய் - நந்தினி

Updated On: 

13 Sep 2025 08:33 AM

 IST

நாமக்கல், செப்டம்பர் 13நாமக்கல் மாவட்டத்தில் தங்கள் கண்முன்னே மகளுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியதைக் கண்டு அவரை பெற்றோர்கள் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக சினிமாவில் தான் காதலுக்காக சேஸிங், கடைசி நிமிட திருமணம் என்பதெல்லாம் நடக்கும். நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் என்பது எப்போதாவது அரங்கேறும். அப்படியான ஒரு திகில் சம்பவம் தான் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்தின் ராசிபுரம் அருகே உள்ள நகர் கோனேரிபட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அஜய் பொறியாளராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினரான நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டையைச் சார்ந்த தண்டபாணியின் மகளும் பொறியியல் கல்லூரி மாணவியுமான நந்தினி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு

இருவரும் விரும்பிய நிலையில் இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள காதலர்கள் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மகள் எந்தவித முடிவும் எடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த தண்டபாணி தினமும் அவரை வீட்டிலிருந்து நாமக்கல் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் கல்லூரி பேருந்துக்கு அழைத்து சென்றும், வீட்டிற்கு திரும்ப கூட்டி வரும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 12) வழக்கம் போல தான் பயிலும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு நந்தினி சென்றுள்ளார்.

Also Read: அத்தை மகனை காதல் திருமணம் செய்த பெண்.. இளம் ஜோடியை மாடுபோல் ஏர் உழவ வைத்த கிராம மக்கள்!

மாலையில் அவர் பஸ்ஸில் நாமக்கல்லுக்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது அவரது தந்தை தண்டபாணி மகளை அழைத்துச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருக்கிறார்.  ஆனால் மகள் பேருந்து நிறுத்தத்தில் இல்லை. இதனால் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.

காரில் நடைபெற்ற கல்யாணம்

இதற்கிடையில் முன்னதாக திட்டமிட்டபடி நாமக்கல்லில் இருந்து  சேலம் செல்லும் சாலை சந்திப்பில் ஒரு காரில் அஜய் மற்றும் அவரது உறவினர்களான யுவராஜ், ஜெயலட்சுமி உள்ளிட்ட 4 பேர் காத்திருந்தனர். அவர்களுடன் நந்தினி காரில் ஏறியுள்ளார். இதனை தண்டபாணி பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக காரை வழிமறித்து அஜய் மற்றும் அவரது உறவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்து தண்டபாணி அஜய் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அஜய் தான் கையில் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியதாக சொல்லப்படுகிறது. இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்ட நிலையில், தன் முன்னே மகளுக்கு காருக்குள் காதலன் தாலி கட்டியதைக் கண்டு தண்டபாணி ஆத்திரமடைந்தார். அவர் தன் உறவினர்களுடன் சேர்ந்து காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். மேலும் காரில் இருந்த அஜய் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களை சரமாரியாக தாக்கினார்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கூட்டம் கூடியது.

Also Read: முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 70 வயதில் திருமணம் செய்துக்கொண்ட ஜோடி.. சுவாரஸ்ய சம்பவம்!

இந்த சம்பவத்தை கண்ட போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் உதவியோடு அஜய், நந்தினி யுவராஜ், ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பேரை மீட்டு நாமக்கல் போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான போலீசார் இரு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அஜயை தான் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக நந்தினி தெரிவித்தார். இதனையடுத்து இரு தரப்பினரையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.