அத்தை மகனை காதல் திருமணம் செய்த பெண்.. இளம் ஜோடியை மாடுபோல் ஏர் உழவ வைத்த கிராம மக்கள்!
Odisha Couple Forced to Plough Field | ஒடிசாவில் சொந்த அத்தை மகனை திருமணம் செய்ததற்காக இளம் ஜோடி கழுத்தில் ஏர் பூட்டி மாடுகளை போல் நிலத்தில் உழவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகும் நிலையில், பலரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒடிசா, ஜூலை 12 : ஒடிசாவில் (Odisha) அத்தை மகனை காதலித்து திருமணம் செய்ததால், இளம் ஜோடியை வயலுக்கு அழைத்துச் சென்ற ஊர் பொதுமக்கள் அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி உழவு செய்ய வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், அது குறித்து கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவுர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த ஜோடி – தண்டனை வழங்கிய ஊர் பொதுமக்கள்
இந்தியாவை பொருத்தவரை வேறு சாதியை மற்றும் மதத்தை சேர்ந்த ஆணையோ அல்லது பெண்ணையோ காதலித்து திருமணம் செய்துக்கொண்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, தண்டனை கொடுப்பது உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தங்கள் பிரிவு மற்றொரு பிரிவிடன் கலக்க கூடாது என நினைக்கும் குறுகிய மனம் படைத்த சமூகத்தின் மிகப்பெரிய சிக்கலாக இது நீடித்து வருகிறது. ஆனால், தங்களது சொந்தத்திற்குள், ஒரே சாதிக்குள் மற்றும் ஒரே மதத்திற்குள் திருமணம் செய்துக்கொள்வது வரவேற்கப்படுகிறது.
இளம் ஜோடியை ஏர் பூட்டி உழவ செய்த கிராம மக்கள்
ஆனால், ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் சொந்த அத்தை மகனை காதலித்து திருமணம் செய்ததால் இளம் ஜோடிக்கு மிகவும் நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் அத்தை மகனையோ அல்லது மகளையோ திருமணம் செய்வது சமூக வழக்கத்திற்கு எதிரானது. இந்த நிலையில் அந்த இளம் ஜோடி சமூக வழக்கத்தை மீறி திருமணம் செய்துக்கொண்ட நிலையில், கிராம மக்கள் இந்த தண்டனையை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
🚨 Shocking from Rayagada, Odisha:
Two lovers publicly assaulted and humiliated by villagers — forced to plough a field as “punishment” for wanting to marry within a distant family relation.This is not justice. It’s cruelty.
Love is not a crime. Where is the humanity? 💔… pic.twitter.com/07eBFU6gPS— kalpataru ojha (@Ojha_kalpataru) July 12, 2025
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அந்த இளம் காதல் ஜோடியின் கழுத்தில் ஏர் பூட்டி நிலத்தை உழவு செய்ய வைக்கின்றனர். அப்போது ஒருவர் கையில் பிரம்பை வைத்துக்கொண்டு மாடுகளை அடித்து உழவு செய்ய வைப்பதை போல காதல் ஜோடியை அடிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.