மூதாட்டியிடம் நகை திருட்டு.. தேடிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Chengalpattu Crime News: செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மூலம் 5 பெண்கள் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட சங்கிலியை ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.

நகை திருட்டில் சிக்கிய பெண்கள்
செங்கல்பட்டு, அக்டோபர் 3: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே மூதாட்டியிடம் தங்க நகை திருடப்பட்ட சம்பவத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் தனது மனைவி பாஞ்சாலியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் உள்ள பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்றிருந்தார். அங்கு இறைவழிபாடு முடித்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்து நுழைவு பகுதி அருகில் வழங்கப்பட்ட அன்னதான பிரசாதத்தை இருவரும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது எதேச்சையாக பார்த்த போது பாஞ்சாலி தனது கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.
சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை
உடனடியாக இது குறித்து கோவில் நிர்வாகிகளிடமும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும் வேணுகோபால் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அன்னதானம் வழங்கும் இடத்தில் ஐந்து பெண்கள் மூதாட்டி பாஞ்சாலியை சுற்றி நின்று இருந்தனர். அப்போது ஒரு பெண் மட்டும் அவருக்கு கழுத்தில் இருந்த தங்கச் செயினை கடித்து எடுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
Also Read: குறி தப்பா போயிடுச்சு.. கோழியை சுட்டபோது விபரீதம்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் பலி
இந்த காட்சிகள் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களை அவர்கள் தேடி வந்தனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருந்த ஐந்து பெண்களை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பிடிபட்ட பெண்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா தேவி, அஞ்சலி, முத்துமாரி, மீனாட்சி, சித்ரா என்பது தெரியவந்தது. இவர்கள் கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கும்பலாக சென்று தங்க நகைகள் அணிந்திருக்கும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
Also Read: சென்னை மெட்ரோ ரயிலில் பரபரப்பு… மலேசிய நாட்டு பெண்ணின் பேக்கை திருடிய HR
கடைசியில் நகை இருந்த இடம்
இப்படியான நிலையில் திருடிய நகைகளை எங்கே வைத்திருக்கிறீர்கள் என போலீசார் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது தங்களிடம் நகை இல்லை என அந்த ஐந்து பேரும் சொல்லி வந்தனர். இதனையடுத்து அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் ஸ்கேன் செய்து பார்த்ததில் ஆசனவாய் பகுதியில் நகையை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து மகளிர் காவலர்களை வைத்து அந்த நகையே போலீசார் மீட்டனர். பின்னர் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.