கரூரில் சோக சம்பவம்…பைக் மீது மோதிய பேருந்து..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
Karur Accident: கரூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 வயது குழந்தை உள்பட மூவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் சாலை விபத்தில் 3 பேர் பலி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சவுந்தர்யா. இவர்களது கனிமதி (1 வயது) என்ற மகள் இருந்தார். இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக விஜயகுமார் நாமக்கல்லில் இருந்து தனது சொந்த ஊரான கரூருக்கு வந்துள்ளார். அதன்படி, அவர் தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி சவுந்தர்யா, மகள் கனிமதி ஆகியோருடன் பரளி கிராமத்தில் இருந்து கரூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக கரூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அப்போது, எதிர்பாராத விதமாக விஜயகுமார் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
பஸ் மோதியதில் துடிக்க துடிக்க இறந்த 3 பேர்
இதில், விஜயகுமார் உள்பட மூவரும் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க உயிரிழந்தனர். அவர்களது இரு சக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கி பலத்த சேதம் அடைந்தது. இதே போல, பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்திருந்தது. உடனடியாக, அங்கு இருந்தவர்கள் கரூர் காவல் நிலையத்துக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கோவையில் ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம்…என்ன வசதிகள்..எங்கு அமைகிறது!
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி.விசாரணை
அதன் பேரில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, குளித்தலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் லால்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விஜயகுமார் உறவினர்கள் தரப்பில் இருந்து புகார் மனு பெறப்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சோகம்
அதன் பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை செய்தனர். வெளியூரிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நபர் தனது குடும்பத்தினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சாலை விபத்தில் சிக்கி 3 பேரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இன்று தொடங்கும் குப்பை திருவிழா.. குப்பைக் கிடங்குகளே இல்லாத தமிழகத்தை நோக்கிய அரசின் பயணம்..