“200 யூனிட் மின்சாரம் இலவசம்”.. முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து!!
Chief Minister Vijay's First Signature: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜய், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக தனது முதல் கையெழுத்திட்டுள்ளார். "தமிழகத்தின் முதலமைச்சராகிய சி.ஜோசப் விஜய் எனும் நான்..." என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

முதல்வர் ஜோசப் விஜய்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜய், தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் “முதல் 200 யூனிட்கள் வரை மின்சாரம்” இலவசமாக வழங்குவதாக தனது முதல் கையெழுத்திட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கான நடவடிக்கை ஆகிய மூன்றிலும் கையெழுத்திட்டுள்ளார். தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் தவெக தலைவர் விஜய்க்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையும் படிக்க: CM Vijay Swearing-in Ceremony Live: முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.. அமைச்சர்கள் யார் யார்?
ஆர்ப்பரித்த தவெக தொண்டர்கள்:
“தமிழகத்தின் முதலமைச்சராகிய சி.ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மக்கள் முன் முதல் கோப்பில் கையெழுத்து:
வழக்கமாக முதலமைச்சராக பதவியேற்கும் தலைவர்கள், தலைமைச் செயலகம் சென்றே முதல் கோப்புகளில் கையெழுத்திடுவர். ஆனால், விஜய் தான் பதவியேற்றதும் மக்கள் முன்பே தனது முதல் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.