டேனிஷ் கோட்டையில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் மாயம் – அதிர்ச்சி தகவல்
istoric Artifact Missing: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட 17 ஆம் ஆண்டு நூற்றாண்டை சேர்ந்த வாள் ஒன்று மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொறையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
மயிலாடுதுறை, டிசம்பர் 26: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் (Museum) தொன்மையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதனை அந்தப் பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்த நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் ஒன்று காணாமல் போன சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொறையார் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை
தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள டேனிஷ் கோட்டை, உலக அளவில் புகழ்பெற்ற தொன்மையான நினைவுச் சின்னமாகவும் முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. கடந்த 1620ஆம் ஆண்டு, தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கர் மற்றும் டென்மார்க் மன்னர் நான்காம் கிறிஸ்டியன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தரங்கம்பாடியில் வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர், டென்மார்க் இராணுவ தளபதி ஓவே கியெட்டே தலைமையில் நிர்வாக நோக்கில் இந்த டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது.
இதையும் படிக்க : தமிழக சட்டப்பேரவை ஜன.20-இல் கூடுகிறது…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!
இந்த நிலையில் கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்த கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து, தமிழ்நாடு தொல்லியல் துறையின் நேரடி கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பின் கீழ் இந்த டேனிஷ் கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் மாயம்
இந்த கோட்டையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்கள், பீரங்கிகள், ஆவணங்கள், ஆயுதங்கள் மற்றும் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, டேனிஷ் கோட்டையின் வரலாற்றுச் சிறப்பை பாதுகாக்கும் நோக்கில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோட்டையின் அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்த இரண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள்களில் ஒன்று காணாமல் போயுள்ளதாக பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் கடும் பனிப் பொழிவு.. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பனி அலெர்ட் இதோ!
தமிழ்நாடு தொல்லியல் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் தினேஷ் குமார் என்பவர் புகார் அளித்தார். அவரது புகாரில், கடந்த டிசம்பர் 24, 2025 அன்று பணியில் இருந்த பாதுகாவலர் பவித்ரன், அங்கிருந்த பொருட்களை சரிபார்த்து, இரவு பணிக்காக வந்த பாதுகாப்பு ஊழியர் ரமேஷிடம் பொறுப்புகளை ஒப்படைத்ததாக கூறியுள்ளார். அதன்பின், டிசம்பர் 25, 2025 அன்று காலை பணிக்கு வந்த அவர், அருங்காட்சியகத்தில் இருந்த பொருட்களை மீண்டும் ஆய்வு செய்தபோது, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 45 செ.மீ நீளமுள்ள 17ஆம் நூற்றாண்டு இரும்பு வாள் ஒன்று காணாமல் போயிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் போன அந்த அரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க வாளை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், பணியில் இருந்த ஊழியர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.