இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்.. நடுக்கடலில் மீன்பிடித்த 12 மீனவர்கள் கைது.. இதற்கு ஒரு END-ஏ கிடையாதா?
Tamil Nadu Fishermen Arrested: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து அழைத்து சென்றது. இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். அவ்வாறு சென்று வரும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அத்துமீறி அவர்களை கைது செய்வதும், அவர்களது மீன்பிடி படகு, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 48 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுக பகுதியில் இருந்து மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, டேவிட் என்ற மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி- தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர், மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர். பின்னர், அவர்களையும், அவர்களின் மீன்பிடி படகு உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: கொடைக்கானலில் நடிகையின் தந்தை சினிமா பாணியில் கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்
ஏற்கெனவே இரு முறை மீனவர்கள் கைது
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 25 மீனவர்கள் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து அழைத்து சென்றது. இதே போல, சில நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து காங்கேசன் முகாமுக்கு கொண்டு சென்றது. அங்கே விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
60 தமிழக மீனவர்களை கைது
இதே போல, ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களில் 3 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தாயகம் திரும்புவதிலும், மற்றவர்கள் விடுதலை செய்யப்படுவதிலும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதன் பிறகு, 2 முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 60 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் – தவெக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு