Top 5 Sourav Ganguly Records: இந்திய கிரிக்கெட்டின் தாதா..! சர்வதேச கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியின் 5 அசைக்க முடியாத சாதனைகள்!

Sourav Ganguly's 5 Unbreakable Records: சவுரவ் கங்குலி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட்டில் அவரது 5 அசாத்திய சாதனைகளை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அதிக ரன்கள், இடதுகை வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர், தொடர்ச்சியான நான்கு ஒருநாள் ஆட்ட நாயகன் விருதுகள், உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் சச்சினுடன் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என அவரது சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன.

Top 5 Sourav Ganguly Records: இந்திய கிரிக்கெட்டின் தாதா..! சர்வதேச கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியின் 5 அசைக்க முடியாத சாதனைகள்!

சவுரவ் கங்குலி

Updated On: 

08 Jul 2025 12:21 PM

இந்திய கிரிக்கெட்டில் (Indian Cricket Team) தாதா என்று அழைக்கப்படும் போதெல்லாம், நமது ஞாபகத்தில் வரும் ஒரே பெயர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly). 2000ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை கட்டமைத்த சவுரவ் கங்குலி, தனது புத்திசாலித்தனமான பேட்டிங்காலும், பயமற்ற கேப்டன்சியாலும் எதிரணி வீரர்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இந்தநிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2008ம் ஆண்டு கங்குலி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கங்குலி படைத்த அந்த 5 சாதனைகள் இன்னும் நிலைத்து நிற்கின்றன. இந்தநிலையில், சவுரவ் கங்குலி படைத்த சாதனை விவரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அதிக ரன்கள்:

கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சவுரவ் கங்குலி 117 ரன்கள் குவித்தார். இருப்பினும், இந்த போட்டியில் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றது. சவுரவ் கங்குலி குவித்த 117 ரன்கள் எந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் அதிகபட்ச ஸ்கோராகும். 2000ம் ஆண்டு பிறகு 2025 வரை எத்தனையோ சாம்பியன் டிராபி இறுதிப்போட்டி நடந்தாலும், சவுரவ் கங்குலி அடித்த ஸ்கோரே அதிகபட்சமாக இன்றுவரை பதிவாகியுள்ளது.

இடது கை பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:

கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சவுரவ் கங்குலி அடித்த 239 ரன்கள் தான் இடது கை இந்திய வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆகும். அவர் இந்த சாதனையை பெங்களூரில் நிகழ்த்தினார். இதன்பிறகு, எத்தனையோ இந்திய பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

ஒருநாள் போட்டிகளில் 4 முறை ஆட்டநாயகன் விருது:

ஒருநாள் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலி இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது தொடர்ச்சியாக நான்கு ஒருநாள் போட்டிகளில் ‘ஆட்ட நாயகன்’ பட்டத்தை வென்றார். இது இன்னும் உலக சாதனையாக இருக்கும் ஒரு சாதனையாகும். அதன்படி, ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆவார்.

உலகக் கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ்:

1999 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக சவுரவ் கங்குலி 183 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் உலகக் கோப்பையில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச இன்னிங்ஸ் ஆகும். ரோஹித், விராட் மற்றும் சேவாக் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தபோதிலும், கங்குலியின் சாதனை இன்னும் நிலைத்திருக்கிறது.

ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:

இந்திய அணிக்காக சவுரவ் கங்குலியும் சச்சின் டெண்டுல்கரும் களத்தில் இருந்தால் எதிரணி பந்துவீச்சாளர்கள் இவர்களது விக்கெட்டை வீழ்த்துவது என்பது எளிதான காரியமல்ல. ஒருநாள் போட்டிகளில் கங்குலியும், சச்சினும் இணைந்து 48 சராசரியில் 176 இன்னிங்ஸ்களில் 8227 ரன்கள் எடுத்தனர். இதுவரை எந்த ஜோடியும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் எட்டியது கிடையாது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், இந்த சாதனையை யாரும் இன்னும் நெருங்க கூட இல்லை.