IPL 2026: ரோஹித் சர்மாவின் காயம்.. சோகத்தில் மும்பை இந்தியன்ஸ்.. மீண்டு வருவாரா?
Rohit Sharma Injury: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, காயம் மற்றும் வலி காரணமாக விலகிய ரோஹித் சர்மா பெவிலியனுக்குத் திரும்பினார். இதன் காரணமாக, அவர் மீண்டும் பேட்டிங் செய்யவில்லை. தற்போது, ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் காயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ரோஹித் சர்மா
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 20-வது லீக் போட்டியில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 12ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு நடுவே மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) காயத்தால் பாதிக்கப்பட்டு பாதியில் வெளியேறினார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடுத்த சில போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. இது உண்மையா..? ரோஹித் சர்மா காயம் குறித்த அப்டேட் குறித்து தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கால்வலியுடன் அரைசதம்.. ஆட்டமிழந்ததும் பறந்த ஹெல்மெட்.. கோலி கோபத்திற்கு காரணம் என்ன?
என்ன நடந்தது..?
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, காயம் மற்றும் வலி காரணமாக விலகிய ரோஹித் சர்மா பெவிலியனுக்குத் திரும்பினார். இதன் காரணமாக, அவர் மீண்டும் பேட்டிங் செய்யவில்லை. தற்போது, ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் காயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில், அடுத்த போட்டியில் அவரது பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது. கிரிக்பஸ் தகவலின்படி, அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பது ஸ்கேன் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தொடை தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பது, அந்த ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில்தான் அமையும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த போட்டி எப்போது..?
மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது ஐந்தாவது லீக் போட்டியான அடுத்த ஆட்டத்தில் வருகின்ற 2026 ஏப்ரல் 16ம் தேதி வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தற்போது, ரோஹித் சர்மாவின் காயம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவரால் அடுத்த போட்டியில் விளையாட முடியுமா என்பது விரைவில் தெரியும்.
மோசமான நிலையில் மும்பை இந்தியன்ஸ்:
ஐபிஎல் 2026 சீசனில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தங்களது தொடக்கப் போட்டியில் மும்பை அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த 3 போட்டிகளில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது.
ALSO READ: விராட் கோலிக்கு முன்பே ஓய்வு கொடுத்திருக்க வேண்டும்.. வர்ணனையாளரின் பேச்சால் எழுந்த சர்ச்சை!
இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து, மும்பை அணி 2 புள்ளிகள் மற்றும் -0.772 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளி அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் இடத்தைப் பிடிக்க, மும்பை அணி இங்கிருந்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.