IPL 2026: ஐபிஎல் 2026ல் மிக இளம் மற்றும் வயதான வீரர்கள் யார்? இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?
IPL 2026 Oldest and Youngest Players: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. எம்.எஸ்.தோனி மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் வயதைக் கணக்கில் கொண்டால், அவர்களுக்கு இடையே கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் உள்ளது.
2026 ஐபிஎல் சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் (M. Chinnaswamy Stadium) நடைபெறுகிறது. இந்த பிரமாண்ட போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பல சாதனைகளும் புள்ளிவிவரங்களும் வெளிவருகின்றன. இதற்கிடையில், இந்த ஐபிஎல் சீசனில் விளையாடும் இளம் மற்றும் மூத்த வீரர் பற்றி முழு விவரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். இருவருக்கும் இடையே 30 வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: எம்.எஸ்.தோனியின் ஓய்வு உறுதி..? முன்னாள் சிஎஸ்கே வீரர் கொடுத்த தகவல்!
இளைய வீரர்:
ஐபிஎல் 2026-ல் பங்கேற்கும் மிக இளைய வீரர், தற்போது 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி, கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். இருப்பினும், ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக வைபவ் தனது 15வது பிறந்தநாளை நிறைவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2026 மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது. அதே சமயம் வைபவ் தனது 15வது பிறந்தநாளை 2026 மார்ச் 27ம் தேதி கொண்டாடுவார்.




ஐபிஎல் 2026 சீசனிலும் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். கடந்த சீசனின் 2025 ஐபிஎல் ஏலத்தில், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு வாங்கியது. தனது முதல் சீசனிலேயே வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்து தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
மூத்த வீரர்:
முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. எம்.எஸ்.தோனி மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் வயதைக் கணக்கில் கொண்டால், அவர்களுக்கு இடையே கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் உள்ளது. எம்.எஸ்.தோனி கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறது.
எம்எஸ் தோனி ஐபிஎல் வாழ்க்கை:
மகேந்திர சிங் தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 278 போட்டிகளில் விளையாடியுள்ளார். 242 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள தோனி, 38.30 சராசரி மற்றும் 137.45 ஸ்டிரைக் ரேட்டுடன் 24 அரை சதங்களுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 ஆகும்.
ALSO READ: ஜெர்சியின் 7ம் நம்பரை விட்டுக்கொடுக்கும் தோனி..? வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு! என்ன காரணம்?
வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வாழ்க்கை:
இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 7 இன்னிங்ஸ்களில், அவர் 36 சராசரி மற்றும் 206.55 ஸ்டிரைக் ரேட்டுடன் ஒரு சதம் ஒரு அரைசதம் உள்பட 252 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 101 ரன்கள் ஆகும்.