IPL 2025 Restart: ஐபிஎல் பங்கேற்க வர மறுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்..? என்ன காரணம்..? சிக்கலில் பிசிசிஐ!
IPL 2025 Schedule: இந்தியா-பாகிஸ்தான் பதட்டம் தணிந்ததை அடுத்து, ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்க உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள், காயம் மற்றும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி காரணமாக ஐபிஎல்லில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஹேசில்வுட், ஸ்டார்க் போன்றோர் காயத்தால் அவதிப்படுகின்றனர். பிசிசிஐ அவர்களை அழைத்திருந்தாலும், அவர்களின் வருகை சந்தேகத்திற்குரியது. இதனால் ஐபிஎல் 2025 பாதிப்படைய வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள்
இந்தியா -பாகிஸ்தான் இடையிலான சண்டை (India – Pakistan Tension) பதட்டம் முடிவுக்கு வந்தநிலையில், மீண்டும் ஐபிஎல் 2025 (IPL 2025) தொடங்க இருக்கிறது. இந்த போட்டி மீண்டும் தொடங்க இருப்பதால் தங்களது சொந்த நாடுகளுக்கு சென்ற வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க வரும்படி பிசிசிஐ (BCCI) அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், வெளிநாட்டு வீரர்கள் திரும்புவது சந்தேகம்தான் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த வீரர்களில் பெரும்பாலோர் ஆஸ்திரேலியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி நடந்தால் பிசிசிஐ அடுத்த 2 ஆண்டுகள் இந்த வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கலாம். இந்தநிலையில்ஏன் பங்கேற்கமாட்டார்கள், அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஜோஷ் ஹேசில்வுட்:
ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகாக விளையாடி வரும் ஹேசில்வுட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, புள்ளிகள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தநிலையில், மீண்டும் ஐபிஎல் தொடங்கப்பட்டால் இவர் பங்கேற்பது கடினம் என்று கூறப்படுகிறது. ஜோஷ் ஹேசில்வுட் கடந்த சில வாரங்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி போட்டியிலும் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடவில்லை. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். பார்டர் கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு, அவர் சாம்பியன்ஸ் டிராபியிலிருந்தும் வெளியேறினார். எனவே, ஜோஷ் ஹேசில்வுட் சிகிச்சை எடுத்துகொள்வார் என்றும், இந்தியா திரும்ப மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
மிட்செல் ஸ்டார்க்:
ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு மிட்செல் ஸ்டார்க் தனது நாடு திரும்பியபோது, அவர் எந்த ஊடகங்களுடனும் பேசவில்லை. ஆனால், அவருடை மேனேஜர் ஸ்டார்க் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பமாட்டார் என்று தெரிவித்தார். ஐபிஎல் 2025ல் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறிவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவர் திரும்பி வருவதில் எந்த அர்த்தமும் இல்லை. இதேகாரணம்தான் டிராவிஸ் ஹெட்க்கும் கூறப்படுகிறது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
ஐபிஎல் 2025 முடிந்த கையோடு வருகின்ற 2025 ஜூன் 11ம் தேதி ஆஸ்திரேலிய வீரர்கள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கின்றனர். இதற்காக ஆஸ்திரேலிய அணி 2025 ஜூன் 6 ஆம் தேதி இங்கிலாந்தை அடையலாம். இவ்வளவு முக்கியமான போட்டிக்கு முன்பு ஐபிஎல் விளையாடுவதன் மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது வீரர்கள் உடல்நிலை சரியில்லாமல் போவதையோ அல்லது எந்தவிதமான காயத்தையும் சந்திப்பதையோ விரும்பவில்லை என்பதால் ஐபிஎல் 2025 மீண்டும் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றனர்.
வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் பங்கேற்கவில்லை என்றால் என்ன நடக்கும்..?
2025 ஐபிஎல் போட்டிகளை 2025 மே 16 முதல் தொடங்குவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இந்தப் போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் வந்தால் பரவாயில்லை. ஆனால், அவர்கள் வரவில்லை என்றால், பிசிசிஐ அந்த வீரர்களுக்கு எதிராக ஒரு பெரிய முடிவை எடுத்து 2 ஆண்டுகள் தடை விதிக்கலாம்.