IPL 2025 Match Rescheduled: ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்.. எங்கு தெரியுமா?
India-Pakistan Tensions: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், தர்மசாலா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால், ஐபிஎல் 2025 போட்டிகள் பாதிக்கப்பட்டு, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி அஹமதாபாத்திற்கு மாற்றப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் போட்டி திட்டமிட்டபடி நடந்தது, ஆனால் டெல்லி அணி ரயில் அல்லது சாலை வழியாக திரும்ப வேண்டியிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

தர்மசாலா கிரிக்கெட் ஸ்டேடியம்
கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் (Pahalgam Terror Attack) யாரும் எதிர்பார்க்காத வகையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில், 30க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் இந்தியா இராணுவம் ஏவுகணை மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. இதை தொடர்ந்து, அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறக்கூடாது என்ற வகையில் ஸ்ரீநகர், கே, ஜம்மு, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகர், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா (Dharamshala) மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 18 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக, ஐபிஎல்லில் (IPL 2025) சில போட்டிகளில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
இடம் மாற்றம்:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது அழித்தது. இதனை தொடர்ந்து, தர்மசாலா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், அங்கு விளையாட திட்டமிடப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வருகின்ற 2025 மே 11ம் தேதி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவிருந்தது. தற்போது இந்த போட்டியானது பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத்தில் உள்ள அஹமதாபாத் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அனில் படேல் கூறுகையில், “ பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியானது வருகின்ற 2025 மே 11ம் தேதி மாலை 3.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். பிசிசிஐ எங்களிடம் இதை கோரிக்கையாக வைத்தது. இந்த போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் இன்று வருகிறது, பஞ்சாப் கிங்ஸின் பயண திட்டங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பஞ்சாப் – டெல்லி போட்டி:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று அதாவது மே 8ம் தேதி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் மூடப்படுவதற்கு முன்பே டெல்லி கேபிடல்ஸ் அணி தர்மசாலாவை அடைந்தது. இருப்பினும், விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், போட்டி முடிந்தபிறகு, டெல்லி அணியினர் சாலை அல்லது ரயில் வழியாக டெல்லிக்கு திரும்ப வேண்டும். வருகின்ற 2025 மே 11ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.