India vs England 5th Test: அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.எல்.ராகுல்.. சர்ச்சை எப்படி தொடங்கியது?

Oval Test Match Controversy: இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், ஜோ ரூட் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடையேயான மோதல், கே.எல்.ராகுல் மற்றும் நடுவர் குமார் தர்மசேனா இடையே கடும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. ராகுலின் நடத்தை குறித்து ICC விதிகளின்படி அபராதம் அல்லது தடை விதிக்கப்படலாம்.

India vs England 5th Test: அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.எல்.ராகுல்.. சர்ச்சை எப்படி தொடங்கியது?

கே.எல்.ராகுல் வாக்குவாதம்

Published: 

02 Aug 2025 10:36 AM

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி போட்டி (India vs England 5th Test) தற்போது ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (Oval Cricket Ground) நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் 2வது நாளான நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 1ம் தேதி இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) மற்றும் நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் மைதானத்திலேயே காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஓவல் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜோ ரூட் இடையேயான வாக்குவாதமே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் பெரும் சர்ச்சையாக மாறியது.

சர்ச்சை எப்படி தொடங்கியது?


இங்கிலாந்து அணி 5வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் 22வது ஓவரில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது, அந்த ஓவரை இந்திய அணிக்காக வீசிய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஜோ ரூட்டுக்கு எதிராக பவுன்சராக வீசினார். அப்போது, ரூட் அதை ஆடாமல் தவிர்க்கவே, பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டிடம் சென்று எதையோ முனுமுனுத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ரூட் அடுத்த பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்து, பின்னர் பிரசித்தை கேலி செய்தார். இதை தொடர்ந்து, பிரசித் கிருஷ்ணாவும் ஏதோ சொன்னார்.

ALSO READ: ஒரு தொடரில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்த சுப்மன் கில்..!

இந்த மோதல் பெரிதாகிவிடக்கூடாது என கள நடுவர் குமார் தர்மசேனா தலையிட்டு பிரசித் கிருஷ்ணாவிற்கு வார்னிங் கொடுத்தார். அப்போது, இதை பார்த்த இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல், கள நடுவர் தர்மசேனாவை நோக்கி நகர்ந்தார்.

கடுமையான வாக்குவாதம்:


தர்மசேனா பிரசித்தை மட்டும் எச்சரித்தபோது, ராகுல் நடுவருடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். அந்த நேரத்தில் கே.எல்.ராகுல், “உங்களுக்கு என்ன வேண்டும்..? நாங்கள் ஏன் அமைதியாக விளையாட வேண்டும்..? என்று கேட்டார். அதற்கு தர்மசேனா, “நீங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பந்து வீச்சாளர் உங்களிடம் வந்து ஏதாவது சொல்வது சரி என்று நினைப்பீர்களா..? எனவே, ராகுல், நீங்களும் இதற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது” என்றார்.

உடனடியாக கே.எல்.ராகுல், “அப்போ நாங்கள் அமைதியாக பேட்டிங், பவுலிங் எல்லாம் பண்ணிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? என்று கேட்டார். தர்மசேனா கடுமையான தொனியில், “போட்டி முடிந்ததும் இதைப் பற்றிப் பேசுவோம்… நீங்கள் என்னிடம் இப்படி பேச கூடாது” என்றார்.

ALSO READ: ஓவல் வானிலை எப்படி இருக்கு? கடைசி டெஸ்ட்டில் தவிக்கும் இந்திய அணி

தண்டனை கிடைக்குமா..?

இந்த வாக்குவாதத்திற்காக கே.எல். ராகுல் மற்றும் பிரசித் கிருஷ்ணா மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஐ.சி.சி விதிகளின்படி, நடுவருடனான அத்தகைய வாதத்தை லெவல்-1 அல்லது லெவல்-2 குற்றமாக வகைப்படுத்தலாம். இதன் கீழ், வீரர் அபராதம், தகுதி இழப்பு புள்ளிகள் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை வழங்கலாம்.

இருப்பினும், நடுவரிடமிருந்தோ அல்லது போட்டி நடுவரிடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.