Hockey Asia Cup 2025: கஜகஸ்தானை கதறவிட்ட இந்திய ஹாக்கி அணி.. 15-0 என்ற கணக்கில் அபார வெற்றி!

Indian Mens Hockey Team: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஹாக்கி ஆசியக் கோப்பை 2025 இல் அபார வெற்றி பெற்றுள்ளது. கஜகஸ்தானை 15-0 என்ற மிகப்பெரிய வெற்றிப் புள்ளிகளால் வீழ்த்திய இந்திய அணி குரூப் ஏ-வில் முதலிடம் பிடித்துள்ளது. அபிஷேக் நான்கு கோல்களும், சுக்ஜீத் மூன்று கோல்களும் அடித்து அசத்தினர்.

Hockey Asia Cup 2025: கஜகஸ்தானை கதறவிட்ட இந்திய ஹாக்கி அணி.. 15-0 என்ற கணக்கில் அபார வெற்றி!

இந்திய ஹாக்கி அணி

Published: 

02 Sep 2025 11:47 AM

 IST

ஹாக்கி ஆசிய கோப்பை 2025ல் (Hockey Asia Cup 2025) இந்திய ஆண்கள் ஹாக்கி அணி (Indian Mens Hockey Team) தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பீகாரில் உள்ள ராஜ்கிர் ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று அதாவது 2025 செப்டம்பர் 1ம்தேதி நடைபெற்ற குரூப் ஏ-வின் கடைசி போட்டியில், இந்தியா 15-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி குழு நிலையை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முடித்தது. இந்திய அணி அடுத்ததாக நாளை அதாவது 2025 செப்டம்பர் 3ம் தேதி சூப்பர்-4 இன் முதல் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக, இந்திய அணி குரூப் ஏவில் சீனாவையும், ஜப்பானையும் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நிமிடங்களிலிருந்தே இந்தியா ஆதிக்கம்:

குரூப் ஏவின் கடைசி லீக் போட்டியில் கஜகஸ்தான் அணிக்கு எதிராக தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. 5வது நிமிடத்தில்  அபிஷேக் முதல் கோலை அடித்தார். விரைவில் இரண்டாவது கோலை அடித்து ஸ்கோரை 2-0 என உயர்த்தினார். முதல் காலிறுதி நேரத்தில் முடிவில் அபிஷேக், சுக்ஜீத்துக்கு ஒரு அற்புதமான பாஸை வழங்கினார். அதனை அற்புதமாக பயன்படுத்திய சுக்ஜீத் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு 3-0 என முன்னிலை படுத்தினார்.

ALSO READ: 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டியா…? ஏலத்தில் பங்கேற்க தயாராகும் மத்திய அரசு!

முதல் பாதியில் 7-0 என முன்னிலை:

இரண்டாவது காலிறுதி நேரத்திலும் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஜக்ராஜ் சிங் 24வது மற்றும் 31வது நிமிடங்களில் அற்புதமான கோல்களை அடித்தார். அதே நேரத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கும் 26வது நிமிடத்தில் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். சிறிது நேரத்திலேயே, அமித் ரோஹிதாஸும் அணியின் ஸ்கோரை அதிகரிப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கினார். பாதி நேரம் வரை இந்தியா ஸ்கோர் 7-0 என முன்னிலை வகித்தது.

ஹாட்ரிக் மழை


மூன்றாவது காலிறுதி நேரத்தின்போது, ஜக்ராஜ் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் தனது மூன்றாவது கோலை அடித்து தனது ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். சுக்ஜீத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி ஹாட்ரிக்கை பதிவு செய்தார். நான்காவது காலிறுதி நேரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் மேலும் அதிகரித்தது. சஞ்சய் 54வது நிமிடத்திலும், தில்ப்ரீத் சிங் 55வது நிமிடத்திலும், இறுதியாக அபிஷேக் 59வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த வழியில், அபிஷேக் இந்த போட்டியில் நான்கு கோல்களை அடித்து இந்தியாவிற்கு மறக்கமுடியாத வெற்றியை தேடிதந்தார்.

ALSO READ: ஹாக்கி ஆசியக் கோப்பை 2025யில் இந்தியா சூப்பர் 4-க்குள்! ஜப்பானை வீழ்த்தி முன்னேற்றம்..!

தென் கொரியாவுடன் மோதல்:

இந்திய ஹாக்கி அணி ஏற்கனவே சூப்பர்-4ல் இடம் பெற்றிருந்த நிலையில், கஜகஸ்தானுக்கு எதிரான இந்த பெரிய வெற்றி அணியின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன், இந்தியா குரூப் ஏ-வில் ஒன்பது புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. இதையடுத்து, இந்திய ஹாக்கி அணி நாளை அதாவது 2025 செப்டம்பர் 3ம் தேதி தனது முதல் சூப்பர்-4 போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த சூப்பர்-4ல் தென் கொரியாவிற்கு எதிரான போட்டிதான் இந்திய ஹாக்கி அணிக்கு உண்மையான சோதனையாக இருக்கும்.