சூதாட்ட செயலி வழக்கு.. உத்தப்பா, யுவராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
அமலாக்கத் துறை (ED), ஆன்லைன் சூதாட்ட செயலி 1xBet வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 22 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் தெரிவிக்கிறது. இதற்கு முன்னர், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) அவருக்கு அனுப்பிய நோட்டீஸில் செப்டம்பர் 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறையால் இதற்கு முன்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. பந்தய செயலியான 1xBet தொடர்புடைய வழக்கில் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வழக்கு விசாரணைக்கான சம்மன் யுவராஜ் சிங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற உத்தப்பா, முன்னதாக 1xBet என்ற சூதாட்ட செயலிக்கான விளம்பர வீடியோக்களில் தோன்றியிருந்தார். இது இந்திய சட்ட மீறல்களுக்காக மத்திய அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ள ஒரு பந்தய செயலியாகும். இந்த செயலியை அங்கீகரிக்கும் வகையில் விளம்பரம் செய்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில், இந்த வழக்கு தொடர்பாக ஷிகர் தவானிடம் அமலாக்கத் துறை எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியது. கடந்த வாரம், அமலாக்கத்துறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்தது. பணமோசடி, வரி ஏய்ப்பு ஆகிய மோசடி செய்ததாக 1xBet செயலி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.




இதையும் படிங்க: 25 ஆண்டு கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி..! ஓய்வை அறிவித்தார் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா!
ஆன்லைன் கேம்கள் தடை சட்டம்
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் கேம்கள் தடை மற்றும் ஒழுங்குபடுத்தும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறிய நிலையில் இதனை மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் தாக்கல் செய்தார். இதன் மூலம் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுகளை எந்த வகையான ஊடகங்களிலும் விளம்பரப்படுத்த முடியாது. மேலும் ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் இதர பண பரிமாற்றம் நடைமுறைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு செய்திகள் நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த மசோதா தேசிய ஆன்லைன் கேமிங் ஆணையத்தை அமைக்க முன்மொழிந்தது.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. அமலாக்கத்துறை முன் பிரகாஷ்ராஜ் ஆஜர்!
தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இதனை விளம்பரப்படுத்தினால் ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.