Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வீட்டில் இதெல்லாம் செய்தால் பணம் கொட்டுமாம்.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!

வாஸ்து சாஸ்திரம் பணம், செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றை அதிகரிக்க உதவும். வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது, உடைந்த பொருட்களை அப்புறப்படுத்துவது, பிரதான வாசலை சுத்தமாக வைத்திருப்பது போன்றவை வாஸ்து விதிகளாகும். அதேபோல் வீட்டில் துளசி செடி வளர்ப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

Vastu Tips: வீட்டில் இதெல்லாம் செய்தால் பணம் கொட்டுமாம்.. வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jun 2025 11:14 AM

வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது ஒருவருடைய வாழ்க்கையில் ஜோதிடத்திற்கு (Astrology) இணையான சக்தியுடன் திகழ்கிறது. நிலம் சம்பந்தப்பட்ட வாஸ்து தற்போது தனி மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஒரு கட்டடம் அமையும் திசை, உள்ளே இருக்கும் அறைகள், வாசலில் வைக்கப்படும் பொருட்கள், வீடு அல்லது அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகள் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பணம், செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள் என பல விஷயங்கள் சம்பந்தப்பட்டதாக வாஸ்து அமையப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதனை சேமித்து வைக்க முடியாத அளவுக்கு நமக்கு வரவுக்கு மேல் செலவு உண்டாகும். எவ்வளவு கவனமாகப் பராமரித்தாலும், திட்டமிட்டாலும் இது நமக்கு பலனை தராது.

அது சம்பந்தப்பட்ட நபர்களின் தவறாக மட்டுமே பார்க்கக்கூடாது. வாஸ்து விதிமுறைகளில் நாம் ஏதேனும் தவறு செய்தால் கூட இப்படி நிகழ வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலும் கூட காரணமாக இருக்கலாம். இப்படியான விஷயங்களை சமாளிக்க நாம் என்ன செய்யலாம் என பார்ப்போம்.

வீட்டில் செய்ய வேண்டிய வாஸ்து விதிமுறைகள்

முதலாவதாக வீடோ அல்லது அலுவலகமோ, நாம் இருக்கும் இடம் சுத்தமாக வைத்திருக்க பழகுங்கள். பலருக்கும் பல வேலைகள் காரணமாக வீட்டை சுத்தப்படுத்துதல் என்பது தினமும் செய்ய முடியாமல் போகலாம். குறைந்தப்பட்சம் வாசல், பூஜையறை, ஹால் ஆகியவை தினமும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும். வீட்டில் தூசி, குப்பைகள் போன்றவை தேங்கியிருந்தால் அவை எதிர்மறையான சக்தியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. மேலும் பூக்கள், அலங்கார பொருட்கள் கொண்டு வீட்டை அழகுப்படுத்தினால் லட்சுமி தேவி மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள் என்பது ஐதீகமாக உள்ளது.

வீட்டில் பயனற்ற மற்றும் சேதமடைந்த பொருட்கள் இருக்கும். அதனை அப்புறப்படுத்த நினைத்து செய்யாமல் இருப்போம். சிலர் வருடத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வண்ணம் தீட்டும்போது இந்த பழைய பொருட்களை அகற்றும் வேலையை செய்வார்கள். இது தவறானது. இதனால் பணம் விரயமாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உடைந்த பாத்திரங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் புகைப்பட சட்டங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது கிடையாது. இவை வீட்டின் அழகைக் குறைப்பது மட்டுமல்லாமல், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுக்கின்றன.

வீட்டின் பிரதான நுழைவு வாயில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கதவுகளில் எந்தவித தூசி, அழுக்கு இருக்கக்கூடாது. கதவில் ஏதேனும் விரிசல் இருந்தால் முடிந்தவரை விரைவாக மாற்ற முயற்சியுங்கள். வாசற்படிக்கு அருகே செருப்பு ஸ்டாண்ட், அழுக்குப் பொருட்கள் போன்றவற்றை வைக்காதீர்கள். இது எதிர்மறையான விளைவுகளை வீட்டில் உண்டாக்கும். அதேசமயம் வீட்டில் துளசி செடி வைப்பது பாசிட்டிவ் எனர்ஜியை நமக்களிக்கும்.

மேலும் பூஜையறையை வண்ணமயமான பூக்களால் அலங்கரிப்பது தெய்வங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் எனவும், வீட்டில் எந்த அறையில் தண்ணீர் தேங்குவது, தண்ணீர் கசிவு ஆகிய பிரச்னைகள் இருந்தாலும் உடனே சரி செய்ய வேண்டும். இதனால் நிச்சயம் பணம் வரவு, சேமிப்பு ஆகியவை எதிர்பாராத அளவுக்கு இருக்கும் என நம்பப்படுகிறது.

(வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)