அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு.. பக்தர்களின் நம்பிக்கை காக்கும் மாசாணி அம்மன்!
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் மாசாணியம்மன் கோயில் தென்மாவட்ட மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐம்பொன் சிலை, நான்கு திசைகளிலும் உள்ள நாககன்னிகள், பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் போன்ற சிறப்புகள் ஆகியவை பற்றி நாம் காணலாம். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு இங்குள்ள கருப்பசாமி காவல் தெய்வமாக உள்ளார்.

எரிச்சநத்தம் மாசாணியம்மன் கோயில்
பொதுவாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளது. அதேசமயம் இங்கு பெண் தெய்வங்களுக்கும் தனியாக கோயில், வெகு விமரிசையாக திருவிழாக்கள் ஆகியவை நடைபெறுவது மிகவும் சிறப்பானதாகும். இப்படியான நிலையில் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் அருள்பாலித்து வரும் மாசானியம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது வத்திரா குடியிருப்புக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் நிறைந்த இக்கோயிலானது தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக நடை திறப்பு காலம் உள்ளது. மேலும் இந்த கோயில் உருவான வரலாறு, சிறப்புகள், திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
கோயில் உருவான வரலாறு
தன்னுடைய அன்பால் அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தி பல்வேறு இடங்களில் தனக்கென ஒரு உருவம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பது ஐதீகமாக உள்ளது. இப்படியான நிலையில் மாசாணி என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் கிராமத்தில் இருக்கும் மாசான கோட்டையில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறாள். ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 2004 ஆம் ஆண்டு சமயத்தில் முதலில் அம்மனுக்கு பீடம் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஆடி மாதம் மாசாணி அம்மனுக்கு ஐம்பொன் சிலை செய்வது என முடிவு செய்யப்பட்டு தேனியில் அது உருவாக்கப்பட்டது.
சரியாக ஆடி மாதம் 32 ஆம் தேதி அமாவாசை நாளில் அம்மன் சிலை முழுவதுமாக வடிவமைக்கப்பட்டது.. இந்த சிலை சுமார் ஆறு மாதம் மரப்பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட பின் எரிச்சநத்தம் கிராமத்தில் அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் பெட்டியில் இருந்து வெளியே வந்த ஐம்பொன் மாசாணி அம்மன் சிலை 2005 ஆம் ஆண்டு தை மாதம் ஒன்றாம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது வரை வழிபாடு நடைபெற்று வருகிறது.
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயிலின் கருவறையின் பின்புறம் நான்கு திசைகளிலும் நாககன்னி ஒரே கல்லில் உருவம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சுமார் 16 அடி கொண்ட மாசாணி அம்மனின் சிலை காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இந்த சிலையானது மூன்றடுக்கு நாகத்தின் மீது பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தி ஐந்து தலை நாகம் மீது அமர்ந்து வடக்கு நோக்கி அடுத்தவாறு வானோக்கி பார்த்து பாதம் காட்டி பதினாறாயிரம் மனைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் பொன் ஆகியவற்றால் அமையப்பெற்றுள்ளது சிறப்பானதாகும்.
இந்த மாசாணி அம்மனுக்கு கிழக்கு பக்கமாக வடக்கு திசை நோக்கி பேச்சியம்மன் அருள்பாலித்து வருகிறார். இவளிடம் வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் மேற்கு பக்கத்தில் வடக்கு திசையை நோக்கி ராக்காச்சி அம்மன் அருள் பாலிக்கிறார். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, நீதிமன்ற வழக்குகள், உடல்நல பிரச்சனை உள்ளிட்ட குறைகளை இந்த அம்மன் தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அம்மன் கருவறையின் கீழ் பக்கமாக இருக்கும் தியான மண்டபத்தில் சார்ந்த ஈசன் அமைந்திருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இவர் தியான லிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மன அமைதி வேண்டுவோர் இந்த ஈசன் முன்பு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டால் அனைத்து குழப்பங்களும் நீங்கி தெளிவு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்கும் கருப்பசாமி
மேலும் அமுத விநாயகர், முறை கருப்பசாமி, மாசாண கருப்பு, சப்த கன்னிமார்கள், 108 கருப்பசாமிகள், என பல சிலைகள் இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குலதெய்வமே தெரியாதவர்கள் இந்த 108 கருப்பு சாமிகளை மனதில் நினைத்து அழைத்தால் ஆபத்துக் காலத்தில் குலதெய்வமாக இருந்து பாதுகாப்பார் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்போ இதில் சித்திரை மாதத்தில் அம்மன் தேரில் உலா வரும் திருவிழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் குளக்கரைக்கு சென்று நீராடி 16 வகையான அபிஷேகம் செய்து அம்மனுக்கு யாகம் நடப்பதும் அதில் பங்கேற்பதும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
இந்த மாசாணி அம்மனை தனிப்பட்ட வாழ்க்கை,தொழில் வாழ்க்கை, திருமண வாழ்க்கை, குடியிருக்கும் வீட்டில் உண்டாகும் பிரச்சனைகள், குழந்தையின் கல்வி மற்றும் உடல் நலத்தில் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காகவும் பக்தர்கள் வேண்டி செல்கின்றனர். இவை யாவும் மாசாணி அம்மனின் அருளால் விரைவில் தீர்ந்து போகிறது என்பது பக்தர்கள் பதிலாக உள்ளதுவாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.
(கோயில் பற்றி இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக நம்பிக்கையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 பொறுப்பேற்காது)