Devi Karumariamman: வேண்டியதை அருளும் தேவி கருமாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோயில், பார்வதி மற்றும் மாரியம்மனின் அம்சமாகக் கருதப்படுகிறது. நாகப்புற்றில் இருந்து சுயம்புவாகத் தோன்றியதால் கருமாரியம்மன் எனப் பெயர் பெற்றது. சூரியனுடன் நிகழ்ந்த கதையின் மூலம் இக்கோயில் சிறப்புப் பெற்றுள்ளது. பங்குனி, புரட்டாசி மாதங்களில் சூரியக் கதிர்கள் அம்மன் பாதத்தில் படும் அற்புதம் இங்கு காணலாம்.

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில்
தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களை மூலவராக கொண்ட பல கோயில்கள் இன்றளவும் செயல்பட்டு வருகிறது. பெண் தெய்வங்கள் சாந்த சொரூபிணியாகவும், தவறு நடந்தால் தண்டிக்கும் காளியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்கள் பல்வேறு பெயர்களில் உள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் ( Devi Karumariamman) கோயிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். பொதுவாக கருமாரியம்மன் பார்வதி மற்றும் மாரியம்மனின் அம்சமாக பார்க்கப்படுகிறார். மற்ற ஊர்களில் இருக்கும் மாரியம்மனுக்கு எல்லாம் முன்னால் இந்த தேவி கருமாரியம்மன் தோன்றியதாக வரலாறு உள்ளது. இந்தக் கோயில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
இந்து மதத்தில் நீள் வட்ட வடிவ முகத்துடன் நகைகள் பெரிய மலர் மாலை மற்றும் சிவப்பு நிற ஆடை அணிந்த ஓர் அழகான பெண்ணாக கருமாரியம்மன் சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு நான்கு கைகள் இருக்கும் நிலையில் அம்மனின் பின்னால் தலைப்பகுதியில் நெருப்பு சுடர்கள் எரிவதாக உள்ளது. மேலும் பாம்பு குடையாகவும், நான்கு கைகளில் ஒன்றில் உடுக்கை, மற்றொன்றில் சூலம், ஒன்றில் கத்தி, மற்றொன்றில் குங்குமம் என ஒரு காலை தொங்கவிட்டபடி மற்றொரு காலை மடித்து கருமாரியம்மன் காட்சியளிக்கிறாள். இந்தத் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
முன்னொரு காலத்தில் இந்த கோயில் இருந்த இடத்தில் நாகபுற்று ஒன்று இருந்தது. இதனை அம்பிகையாக பாவித்து அப்பகுதி மக்கள் வணங்கி வந்தனர். பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை புற்று இருக்கும் இடத்தில் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என கூறினாள். இதனைத் தொடர்ந்து புற்றின் அடியில் தோண்டும்போது அங்கு அம்பிகை சுயம்பு வடிவில் எழுந்தருளினாள். இதனைக் கண்டு பரவசம் அடைந்த பக்தர்கள் அப்பகுதியில் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபட்டனர். சுயம்புவாக தோன்றியதால் இவளுக்கு கருவில் இல்லாத மாரி கருமாரி என பெயர் சூட்டப்பட்டது.
கோயிலின் சிறப்புகள்
ஒருமுறை சூரிய பகவானை கருமாரியம்மன் ஜோதிடராக வேடமிட்டு சந்தித்து அவரது எதிர்காலத்தை கணிக்க முடிவு செய்தார். ஆனால் சூரிய பகவான் அவளுக்கு காட்சி கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கருமாரியம்மன் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறிய நிலையில் சூரியன் பிரகாசத்தை இழக்கத் தொடங்கியது. பூமி இருளில் மூழ்க பிரபஞ்சத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையில் சூரிய பகவான் தனது தவறை உணர்ந்து கருமாரியம்மனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் வருடத்திற்கு இரண்டு முறை கால்களை தொட்டு வணங்குவதாகவும் உறுதியளித்தார்.
அப்படியாக மனம் குளிர்ந்த கருமாரியம்மன் சூரியனை ஆசீர்வதித்து இழந்த பிரகாசத்தை மீட்டுக் கொடுத்தார். திருவேற்காட்டில் இருக்கும் கருமாரியம்மன் பாதத்தில் பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் அம்மனின் பாதங்களில் நேரடியாக சூரிய கதிர்கள் விழுவதை காணலாம்.
தினமும் குங்கும அர்ச்சனை
இந்த கோயிலில் தினமும் மாலை நேரத்தில் பிரதோஷ வேளையில் குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. மேலும் அம்பாள் சன்னதியில் பதி விளக்கு என்பது உள்ளது. இதனை சுற்றி விநாயகர், முருகன், சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வெளியே திருச்சாம்பல் பொய்கை எனும் தீர்த்தம் உள்ளது. அம்பிகையின் சன்னதியில் கொடிமரம் உள்ளது. பொதுவாக அம்மன் கோயில்களில் காப்பு கட்டி தான் திருவிழா கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
வெளியே இருக்கும் நாகப்புற்று சன்னதியில் பக்தர்கள் முட்டை, மஞ்சள் மற்றும் குங்கும் வைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் இங்கிருக்கும் புற்று மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடவும் செய்கின்றனர்.
கோயிலின் விழாக்கள்
தேவி கருமாரியம்மன் கோயிலில் வள்ளி தெய்வானையுடன் முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் தட்சணாமூர்த்தி, உச்சிஷ்ட கணபதி, அங்காள பரமேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, துர்க்கை ஆகியோரும் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இக்கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட கருமாரியம்மன் சிலை கொண்ட சன்னதி உள்ளது. இவளிடம் வேண்டினாள் குடும்பத்திற்கு பாதுகாப்பு, வாழ்க்கையில் நம்பிக்கை, செல்வ வளம் ஆகியவற்றை அருளுவாள் என்பது நம்பிக்கையாகும்.
தேவி கருமாரி அம்மனுக்கு தை மாதம் பிரம்மோற்சவம், சித்திரை மாத பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மற்றும் புரட்டாசியில் 12 வாரங்கள் நடைபெறும் திருவிழா, நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகியவை வரிசையாக நடைபெறும். சென்னையின் அனைத்து இடங்களில் இருந்தும் திருவேற்காட்டுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது. முடிந்தவர்கள் ஒருமுறை சென்று சாமி தரிசனம் செய்து வாருங்கள்.
(தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் பற்றிய ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)