நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!
பாபநாசம் பாபநாதர் சுவாமி திருக்கோயிலில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த பாபநாசநாதர் கோயில், நவகைலாய தலங்களில் ஒன்று. இந்திரனின் பாவ மோட்சம், அகத்திய முனிவர் தொடர்பு, தாமிரபரணி ஆற்றின் சிறப்பு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது.

பாபநாதர் சுவாமி
பொதுவாகவே இந்தியா முழுவதும் சைவ, வைணவ சம்பந்தப்பட்ட கோயில்கள் உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றாகும். ஆனால் இந்த கோயில்களில் நாம் ஒரு சில விஷயங்களை கவனிக்க முடியும். அதாவது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இரு சமயத்தில் வழிபடும் தெய்வங்களும் இரண்டு கோயில்களிலும் இடம் பெற்றிருக்கும். அதேசமயம் நீர் நிலைகளில் அமையப்பெற்றுள்ள கோயில்கள் மற்ற வழிபாட்டு தலங்களில் இருந்து தனித்து தெரியும். அப்படியாக நாம் இந்த தொகுப்பில் தமிழ்நாட்டில் தொடங்கி தமிழ்நாட்டில் முடிவடையும், இன்னும் சொல்லப்போனால் ஒரு மாவட்டத்தில் தொடங்கி அதே மாவட்டத்தில் முடிவடையும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள நவ கைலாய ஆலயங்கள் பார்க்கலாம். அதில் முதலாவதாக அருள்பாலிக்கும் பாபநாசம் பாபநாத நாதர் திருக்கோயில் பற்றி அறிந்துக் கொள்ளலாம்.
இந்த கோயிலானது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ள இந்த கோயிலுக்கு வட இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலானது அதிகாலை 5.30 மணி முதல் 1 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது தேவர்களும், முனிவர்களும் ஒரே இடத்தில் கூடினர். அப்போது வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது.
அதனை சமன் செய்வதற்காக அகத்தியரை சிவன் பொதியும் மலைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு தனது திருமண கோலத்தை சித்திரை மாத பிறப்பன்று அருள் பாலித்தார். இப்படியாக இந்த கோயிலானது உருவானது. பாபநாசம் கோயிலில் கருவறைக்கு பின்புறம் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷப வாகனத்தின் மீது சிவன் அருள் பாலிக்கிறார். அவருக்கு அருகிலேயே அகத்தியரும் அவரது மனைவி லோப முத்திரையும் வணங்கிய நிலையில் காட்சி கொடுக்கின்றனர்.
பாபநாதர் சுவாமியாக அழைக்கப்பட்ட தருணம்
இந்திரன் அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை குருவாக ஏற்றுக் கொண்டான். துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்திய நிலையில் இதனை அறிந்த இந்திரன் அவனை கொன்று விட்டான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. பூலோகத்தில் பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான் இந்திரன். அப்போது குரு பகவான் பாபநாசத்தில் வீற்றிருக்கும் பாவநாதர் சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என சொன்னார். அப்படியாக இந்திரனின் தோஷத்தை நீக்கியதால் இவர் பாபநாசநாதர் என அழைக்கப்படுகிறார்.
நவகைலாயம் என அழைக்கப்பட காரணம்
ஒருமுறை தாமிரபரணி நதிக்கரையில் அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் பல இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் அதற்கான இடங்களை தேர்வு செய்து தருமாறும் கேட்டார். இதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை எல்லாம் வீசவும். அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி அகத்தியர் தெரிவித்தார். அப்படியாக அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய இடமே நவகைலாய தலங்களாக அழைக்கப்படுகிறது. நவகைலாயம் தலங்களில் முதல் தரமான பாபநாசம் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் சிறப்புகள்
பொதிகை மலையில் ஊற்றாக உருவாகி மலைகளில் அருவியாக விழுந்து ஓடிவரும் தாமரபரணி நதியானது பாபநாசம் கோயிலில் முன்புதான் சமநிலை அடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜை நடைபெறும் போது கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாத உணவுகள் அனைத்தும் நதியில் இருக்கும் மீன்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஒரு முறை தைப்பூச தினத்தில் நடராஜர் நந்தி கொம்புகளுக்கு இடையே நின்று வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு நடன தரிசனம் கொடுத்தார். அதனால் இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தில் நந்தி பகவானுக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
அதேபோல் அம்பாளாக அருள்பாலிக்கும் உலகம்மை முன்பு ஒரு உரல் இருக்கிறது. இது பெண்கள் விரலி மஞ்சள் போட்டு இடிக்கின்றனர். இந்த மஞ்சள் கொண்டு தான் தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த மஞ்சளை உணவுடன் கலந்து சாப்பிட்டால் திருமண வரன், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
பித்ரு தோஷம் நீங்கும்
இந்த கோயிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதனை தவிர்த்து அகத்தியருக்கு திருமண காட்சி கொடுக்கும் விழா, தைப்பூசமாகவே விவரிசையாக கொண்டாடப்படும். முன்னோர்களுக்கு திதி கொடுக்க பாபநாசத்தில் இருக்கும் தாமிரபரணி நதிக்கரை மிகச்சிறந்த இடமாகும். இன்று திதி கொடுப்பதால் பித்ரு தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்து பாபநாசத்திற்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. அதே சமயம் திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் அம்பாசமுத்திரம் வரை சென்று பின்பு அங்கிருந்து மினி பேருந்து மூலம் கோயிலை அடையலாம்.