Lord Murugan: ஆடி செவ்வாயில் முருகன் வழிபாடு.. என்னென்ன பலன்கள் தெரியுமா?
ஆடி மாத செவ்வாய்கிழமைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். வீட்டில் அல்லது கோயிலில் வழிபாடு செய்யலாம். விஸ்வரூப தரிசனம் காண்பது துன்பங்களை நீக்குவதாகவும், அறுபடை வீடுகளில் வழிபாடு செய்வது புண்ணியம் தரும் என்றும் நம்பிக்கையாகும்.

முருகன் வழிபாடு
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இத்தகைய நாளில் நாம் பெண் தெய்வங்களை வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த ஆடி மாதத்தில் நாம் வணங்கக்கூடிய ஒரே ஆண் தெய்வமாக முருகப்பெருமான் பார்க்கப்படுகிறார். குறிப்பாக ஆடி மாத செவ்வாய் கிழமையில் இவரை வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை நம்முடைய வாழ்க்கையை வழிநடத்துவத்தில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய கிரகங்களில் செவ்வாய் பகவானுடன் நேரடியாக தொடர்பு கொண்டவராக முருகப்பெருமான் திகழ்கிறார். எனவே இந்நாளில் நாம் கண்டிப்பாக வீட்டிலும் சரி, கோயிலிலும் சரி முருகரை வழிபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதேசமயம் செவ்வாய் சம்பந்தப்பட்ட முருகன் கோயில்களுக்கு சென்று ஓர் இரவு தங்கி அதிகாலையில் நடைபெறும் முதல் வழிபாடான விஸ்வரூப தரிசனம் பார்த்தால் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், தடைகள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு தங்க முடியாதவர்கள் அன்றைய நாளில் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அறுபடை வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் அந்தந்த முருகனை சென்று வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
Also Read: Lord Murugan: அடேங்கப்பா.. இந்த முருகன் கோயிலுக்கு இப்படி ஒரு பவரா?
முருகனுக்கும், செவ்வாயுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் முருகனை வழிபட செவ்வாய்கிழமை மிக சிறந்த நாளாக குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் வழிபடுபவர்களாக இருந்தால் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் வீட்டு வாசலில் அரிசி மாவு கோலமிட்டு பின்னர் பூஜையறையில் மனைப்பலகை வைத்து அதிலும் கோலம், ஸ்வஸ்திக் சக்கரம், நட்சத்திரம் என எது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
தொடர்ந்து முருகப்பெருமானின் புகைப்படம் அல்லது சிலை இருந்தால் அதன்மேல் வைத்து முன்னால் வாழையிலை விரித்து அதில் முருகனுக்குரிய நைவேத்தியங்கள் வைத்து வழிபடலாம். இந்த வழிபாட்டின்போது முருகனுக்குரிய பக்தி பாடல்களை பாடலாம். சிலர் இந்நாளில் இருவேளை விரதம் இருக்கிறார்கள். முடிந்தவர்கள் எதுவும் சாப்பிடாமலும், முடியாதவர்கள் பால், பழம் உட்கொண்டும் விரதம் கடைபிடிக்கலாம்.
Also Read: 7 மாதம் மட்டுமே திறந்திருக்கும் முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?
பின்னர் தீப, தூபம் காட்டிய பிறகு விளக்கேற்றி வழிபட வேண்டும். தொடர்ந்து நைவேத்தியங்களை பகிர்ந்தளித்து சாப்பிட்டு விரதத்தை, வழிபாட்டை முடிக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் முருகன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார் என்பதால் இந்நாளில் நீங்கள் எப்படிப்பட்ட முருகனையும் நேரில் சென்று வேண்டலாம். இதனால் நம் வாழ்க்கையின் உயர்வுக்கு முருகப்பெருமான் உதவுவதோடு, துன்பம் வரும் வேளையில் நம்மை தட்டிக்கொடுத்து தைரியம் கொடுத்து எதையும் எதிர்கொள்ளும் சக்தியை அளிப்பான் என நம்பப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)