Navratri 2025: நவராத்திரி 9வது நாள்.. இன்று எப்படி வழிபடலாம்?
Navratri 2025 Day 9: நவராத்திரி விழா சித்திதாத்ரி தேவி வழிபாட்டுடன் இன்று (செப் 30, 2025) நிறைவடைகிறது. துர்கா தேவியின் ஒன்பதாவது வடிவமான சித்திதாத்ரி, பக்தர்களுக்கு எட்டு ஆன்மீக சக்திகளையும் மோட்சத்தையும் அருள்கிறார். அமைதி, இரக்கம், ஞானம் ஆகியவற்றை அளிக்கும் இவரை இளஞ்சிவப்பு நிறத்தில் வழிபடுவது சிறப்பாகும்.

நவராத்திரி
நவராத்திரி விழா இன்றுடன் நிறைவடைகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் வழிபடப்படும் துர்கா தேவியின் ஒன்பதாவது மற்றும் இறுதி வடிவம் தான் அன்னை பராசக்தி சித்திதாத்ரி தேவியாகும். கடந்த 2025 செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி விழா 2025 செப்டம்பர் 30 ஆம் தேதி 9 நாட்கள் கொண்டாட்டத்துடன் நிறைவடைகிறது. அந்த வகையில் இன்று இந்த விழாவின் கடைசி நாளாகும். இன்று வழிபடப்படும் சித்திதாத்ரி தேவி பெயருக்கு அர்த்தம் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு உள்ளது. ‘சித்தி’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது ஆன்மீக ஆசீர்வாதங்கள் என்பது பொருளாகும். அதேசமயம் ‘தாத்ரி’, அதாவது கொடுப்பவள் என அர்த்தமாகும்.
இந்த 9வது நாள் அமைதி, இரக்கம் மற்றும் உச்ச சக்தியின் உருவகமாக விளங்கும் சித்திதாத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பக்தர்களை மோட்சத்தை (முக்தி) நோக்கி வழிநடத்துவதாக நம்பப்படுகிறது. தனது பெயருக்கு ஏற்றவாறு, சித்திதாத்ரி தேவி தனது பக்தர்களுக்கு அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாம்யா, இஷித்வா மற்றும் வஷித்வா ஆகிய எட்டு ஆன்மீக சக்திகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.
Also Read: தமிழ்நாட்டில் 2 இடங்களில் தனி கோயில்களில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி தேவி!
சித்திதாத்ரி தேவி இளஞ்சிவப்பு தாமரை அல்லது சிங்கத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சிக் கொடுக்கும் அவள் அதில் தாமரை, கதாயுதம், சகஸ்ரம் மற்றும் சங்கு ஆகியவற்றை ஏந்தியிருக்கிறார். இது ஆன்மீக ஞானம், வலிமை, நேரம் மற்றும் அண்ட சக்தியைக் குறிக்கிறது. இந்து புராணங்களின்படி, உந்த உலகம் உருவமற்றிருந்தபோது, சிவபெருமான் ஆதி பராசக்தியை வழிபட்டார், அவள் சித்திதாத்ரி தேவி வடிவத்தில் தோன்றி சிவபெருமானுக்கு காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து அனைத்து சக்திகளையும் அளித்து, அவரை அர்த்தநாரீஸ்வரராக மாற்றினாள், இது ஆண் மற்றும் பெண் சக்திகள் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு வடிவமாகும். சித்திதாத்ரி தேவியை வழிபடுவது அறியாமை, அகங்காரம் மற்றும் பொருள் ஆசைகளை நீக்கி, ஞானம், அமைதி மற்றும் ஆன்மீக நிறைவைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
Also Read: Diwali 2025 Astrology: தீபாவளிக்குப் பின் இந்த 4 ராசிகளுக்கும் நல்ல நேரம் பிறக்கும்!
நவராத்திரி விழாவின் 9 ஆம் நாளுக்கான நிறம் இளஞ்சிவப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அன்பு, பக்தி, இரக்கம், நல்லிணக்கம் மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது. மேலும் இளஞ்சிவப்பு நிறம் மென்மையையும் ஆன்மீக அருளையும் பிரதிபலிக்கிறது. இந்நாளில் வழிபாட்டின்போது ஓம் தேவி சித்திதாத்ரியாயை நமஹ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பஞ்சாங்கத்தின்படி, அஷ்டமி திதி செப்டம்பர் 29 அன்று மாலை 4:31 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 30 அன்று மதியம் 2.02 மணிக்கு முடிவடைகிறது. பின்னர் நவமி திதி செப்டம்பர் 30 அன்று பிற்பகல் 2:02 மணிக்கு தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி பிற்பகல் 3:16 மணிக்கு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.