கோலாகலமான நடந்த மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல்?
2025 மே 8 ஆம் தேதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டுகளித்த இந்த நிகழ்வில் சுமங்கலி பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர். சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் (Madurai Chithirai Thiruvizha) சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று (2025, மே 8) கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் பங்கேற்று தம்பதியினரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். மதுரை என்றாலே நம் அனைவருக்கும் மீனாட்சியம்மன் கோயில் (Meenakshiamman Temple) தான் நினைவுக்கு வரும். அந்த மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். சுமார் 20 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி திக் விஜயம், மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. 2025, மே 6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், மே 7 ஆம் தேதி திக் விஜயம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மே 8 ஆம் தேதியான இன்று காலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் தாலி கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
முன்பதிவு செய்த பக்தர்களுக்கு குழுக்கள் முறையில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர்களின் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நேற்று காலை முதல் தொடங்கியது. அதேசமயம் திருக்கல்யாணத்திற்கு மொய் செலுத்துபவர்களுக்கு தனிக்கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தை நேரில் காண முடியாத பக்தர்கள் வீட்டில் நேரலை மூலம் கண்டு களித்தனர். மீனாட்சி அம்மனுக்கு தாலி கட்டும் நிகழ்வு முடிந்தவுடன் கூடியிருந்த பெண்கள் அனைவரும் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர். சிலர் தங்கள் கணவர் மூலமாக புது கயிறு மாற்றிய நிலையில் சிலர் தாங்களாகவே அம்மனிடம் ஆசி வாங்கி மாற்றிக் கொண்டனர்.
இந்தத் திருக்கல்யாண நிகழ்வில் சுந்தரேஸ்வரருக்கு தங்கை மீனாட்சி பவளக்க கனியாய் பெருமாள் தாரை வார்த்து கொடுத்தார் இதனை தொடர்ந்து மீனாட்சிக்கு தங்க கிரீடம் மாணிக்க மூக்குத்தி மற்றும் பச்சைக்கல் பதக்கம் அணிவிக்கப்பட்டது. இந்தத் திருக்கல்யாண நிகழ்வானது வடக்கு மேல ஆடி வீதி சந்திப்பில் இருக்கும் மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கல்யாண மேடை சுமார் பத்து டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில் 500 கிலோ பழங்களும் அதில் இடம்பெற்று இருந்தது. பின்னர் இருவரும் தம்பதியினர் சமேதராய் முத்துராமய்யர் மண்டபத்தில் எழுந்தருளினர்.
சித்திரை திருவிழாவின் முக்கியமான நிகழ்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மதுரை மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.