ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!
நடிகர் ராஜேஷ் ஜோதிடத்தில் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பார். தனக்கு பதினோரு வயதில் ஜோதிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டது எப்படி என்றும், அவரது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் ஜோதிடத்தின் தாக்கம் பற்றிய தகவல்களையும் அதில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றிக் காண்போம்.

நடிகர் ராஜேஷ்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி குணசித்திர வேடத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகர் ராஜேஷ். இன்றைக்கும் ஒரு இளைஞரைப் போல மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆசிரியராக பணியாற்றியவர். இப்படியான நிலையில் ராஜேஷூக்கு ஜோதிடத்தின் மீது தவிர்க்க முடியாத நம்பிக்கை என்பது உள்ளது. இதனை பல நேர்காணல்களில் வெளிப்படையாகவே அவர் பேசியுள்ளார். அதனைப் பற்றி நாம் காணலாம். அதாவது, “எனக்கு ஜோதிடத்தின் மேல் பதினோரு வயதில் நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அப்பா மற்றும் அத்தை ஆகியோர் ஜோதிடம் பார்த்த நிலையில் அதில் கூறப்பட்ட விஷயங்கள் அப்படியே என் வீட்டில் நடந்தது. இது என்னுடைய மனதில் அப்படியே பதிந்து விட்டது.
எனக்குள் எழுந்த சந்தேகம்
ஆனால் என்னுடைய 32வது வயதில் நான் நடனத்தை தவிர்த்து அனைத்தையும் கற்றுக் கொண்டுதான் சினிமாவிற்குள் வந்தேன். ஆனால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. எனக்கு 32 வயது ஆகும்போது அந்த ஏழு நாட்கள் படம் வந்திருந்தது. அதே சமயம் எனக்கு சொந்தத்தில் திருமணம் செய்ய பெண் கொடுக்க மாட்டார்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் மிக கவனமாக இருந்தேன். அதன்படி மது அருந்த மாட்டேன், புகைப்பிடிக்க மாட்டேன் என இந்த நாட்டில் எதையெல்லாம் சமுதாய ரீதியாக சட்டரீதியாக ஒழுக்கம் என வரையறுத்து உள்ளார்களோ அதை கடைபிடித்தேன்.
ஆனாலும் யாரும் பெண் கொடுக்கவில்லை. 34 வயதில் சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு தான் ஜோதிடம் சென்று பார்த்தேன். அப்போது சிம்ம லக்கனத்தில் ஆறில் சுக்கிரன் என்பதால் என்னுடைய 14 வயது வரை நான் மிகவும் கஷ்டப்பட்டு இருப்பேன். சிலருக்கு ஏழு வயதில், 11 வயதில், 21 வயதில் ஞானமானது பிறக்கும். நான் என்னுடைய ஏழு வயது வரை படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக திகழ்ந்தேன். என்னுடைய பெரியப்பா கூட இவன் பின்னாளில் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானவராக வருவான் என சொன்னார்.
ஜோதிடம் என்பது உண்மை
ஆனால் 8 வயது முதல் 14 வயது வரை இந்த உலகத்தில் என்னை விட முட்டாள் யாரும் கிடையாது என்பது போல இருந்தேன். நான் பள்ளிக்கே செல்ல பயப்படுவேன். சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்வேன். ஆனால் எனக்கு சூரிய திசை வந்த பிறகு தான் பிரமாதமாக படிக்க தொடங்கினேன். அதேபோல் சந்திரன் பூராட நட்சத்திரத்தில் வரும் போது தான் வாழ்க்கையில் முன்னேற தொடங்கினேன். ஜோதிடம் பற்றி படிக்க ஆரம்பித்தேன். செவ்வாய் திசை வரும் போது தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். துலாமில் சனி இருக்கும்போது அந்த ஒரு வருடம் நான் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டேன்.
நான் பத்து வருடம் கம்யூனிசம் படித்திருக்கிறேன். அது பொய் கிடையாது. நாத்திகம் பத்து வருடம் படித்திருக்கிறேன் அதுவும் பொய் கிடையாது. எப்படி எல்லாம் பொய் கிடையாது என்ற கூற்று உண்மையோ அதுபோல் ஜோதிடமும் உண்மைதான்” என ராஜேஷ் தெரிவித்திருப்பார்.