Varalakshmi Viratham: வரலட்சுமி விரதம்.. கலசம் வைத்து வழிபடுபவர்கள் கவனத்திற்கு!
வரலட்சுமி விரதம் ஆடி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று கொண்டாடப்படும் முக்கியமான விழாவாக பார்க்கப்படுகிறது. கணவனின் ஆயுள், செல்வம், குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். இதில் கலச வழிபாடு முக்கிய அங்கமாகும். இந்தக் கலசம் அமைக்கும் முறை பற்றிக் காணலாம்.

வரலட்சுமி விரதம்
வரலட்சுமி நோன்பு என்பது இந்து சமூகத்தில் பெண்களால் பின்பற்றப்படும் மிக முக்கியமான விசேஷ தினம் ஆகும். ஆடி மாதத்தின் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிகிழமை இந்த நாளானது கடைபிடிக்கப்படுகிறது. வரலட்சுமி தினத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபடுவதால் கணவரின் ஆயுள் நீளும் எனவும், நீண்ட காலம் சுமங்கலியாக வாழலாம் எனவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் செல்வ வளம், நிம்மதி மற்றும் குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்க இன்னாளில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆனது ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் மாலையில் பௌர்ணமி திதி வருவதால் இந்நாள் சிறப்பான நாளாக வழிபாட்டிற்கு பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வரலட்சுமி நோன்பு இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படம் அல்லது கலசம் அல்லது மகாலட்சுமியின் உருவம் செய்து வழிபாடுகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் கலசம் வைத்து வழிபடுபவர்கள் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி காணலாம்.
Also Read: Lakshmi Devi: லட்சுமி தேவி ஆசீர்வாதம் வேண்டுமா? – இரவில் இதெல்லாம் செய்யுங்க!
கலசம் வைத்து வழிபட வேண்டிய முறைகள்
ஒருவேளை நீங்கள் கலசம் வைத்து வழிபடுபவர்களாக இருந்தால் அதற்கு முதலில் எவர்சில்வர் அல்லாத ஏதேனும் ஒரு உலோகங்களால் ஆன சொம்பை பயன்படுத்தலாம். அந்த கலசத்தில் சிலர் தண்ணீர் நிரப்பி வழிபடுகிறார்கள். சிலர் பச்சரிசி நிரப்பி வழிபடுகிறார்கள். நீங்கள் தண்ணீர் நிரப்பி வழிபடுபவர்கள் என்றால் அதனுள் எலுமிச்சம் பழம், ஏலக்காய், மஞ்சள் தூள், வாசனை திரவிய பொடி, சில நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து அதன் மேல் மஞ்சள் தடவப்பட்ட தேங்காயால் கும்பம் அமைத்து வழிபடலாம்.
அந்தக் கும்பத்தின் மேலே மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணி கட்டி அதில் பூக்கள் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். தேங்காய்க்கு அடிப்பக்கத்தில் மா இலைகள் இருக்குமாறு செய்ய வேண்டும்.
அதேசமயம் கலசத்தில் அரிசி போடுபவர்கள் முக்கால் பாகம் அளவிற்கு பச்சரிசி நிரப்பி கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழம், நாணயங்கள், விரலி மஞ்சள், ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், மாசிக்காய், கருகுமணி ஆகியவை சேர்த்து கலசத்திற்கு மேல் மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை கும்பமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலசத்தை ஒரு மனை பலகையில் சிறிய கோலம் ஒன்றை இட்டு அதன் மீது வாழை இலை விரித்து, அதில் பச்சரிசி அல்லது நெல் பரப்பி அதற்கு மேல் வைக்க வேண்டும். ஒருவேளை வாழையிலை இல்லை என்றால் தாம்பூலம் பயன்படுத்தலாம்.
Also Read: Varalakshmi Vratam: ஆகஸ்ட் 8ல் வரலட்சுமி நோன்பு.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
வரலட்சுமி நோன்பு வழிபாட்டிற்கு பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை ஜூஸ் போட்டு பருகலாம். தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றலாம். அரிசியை சர்க்கரைப் பொங்கல் செய்து இறைவனுக்கு நைவேத்தியமாக வைக்கலாம். நாணயங்களை கோயில் உண்டியலில் செலுத்து விடலாம். தேங்காயை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின்பால் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)