Tirunelveli: தமிழ்நாட்டின் 3வது பெரிய தேர்.. நெல்லையப்பர் தேருக்கு இப்படி ஒரு வரலாறா?
Nellaiappar Temple Car Festival: 2025 ஜூலை 8 ஆம் தேதி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் 519வது ஆனித்தேரோட்டம் நடைபெறுகிறது. ஐந்து தேர்களில் எழுந்தருளும் சுவாமிகள் ரத வீதிகளை வலம் வருவார்கள். நெல்லையப்பர் தேர் 450 டன் எடை, 85 அடி உயரம் கொண்டது. குற்றால சீசனுடன் பொருந்தி வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருவிழா தென் தமிழகத்தின் முக்கிய நிகழ்வாகும்.

திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டம் என்றாலே ஆன்மிக ரீதியாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயில் (Nellaiappar – Kanthimathi Amman Temple) தான். தென் தமிழகத்தின் மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயில் மிகப்பெரிய சிறப்புகளை கொண்டதாகும். ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு விசேஷ தினம் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் ஓராண்டின் சிகர நிகழ்ச்சியாக ஆனித்தேரோட்டமும், ஐப்பசி திருக்கல்யாணமும் மிகச் சிறப்பான வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான திருத்தேரோட்டம் ஜூலை 8 ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. 2025, ஜூன் 30 ஆம் தேதி ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் 10 நாள் திருவிழாவின் 9ம் நாள் திருத்தேரோட்டமானது நடைபெறும்.
5 தேர்களில் எழும் சுவாமிகள்
நெல்லையப்பர் கோயிலை பொறுத்தமட்டில் முதலில் விநாயகர் தேர் இழுக்கப்படும். இதனைத் தொடர்ந்து முருகன், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் ரத வீதிகளை வளம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள். இதில் நெல்லையப்பர் தேரை தவிர்த்து மற்ற நான்கு தேரையும் சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் மட்டுமே பெரும்பாலும் இழுத்து மகிழ்வார்கள்.
சரியாக ஆனி மாதம் திருவிழாவின்போது குற்றால சீசனும் தொடங்கி விடுவதால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் கண்டிப்பாக நெல்லையப்பர் கோவிலை தரிசிக்காமல் செல்வதில்லை. அவர்களும் தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொள்வதால் இந்த நிகழ்வு தென் தமிழ்நாட்டின் மிக முக்கிய விசேஷமாக பார்க்கப்படுகிறது.
நெல்லையப்பர் தேரின் சிறப்புகள்
- 2025 ஆம் ஆண்டு தேரோட்டம் 519 ஆவது ஆனித் தேரோட்டமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கோயில்களின் தேர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய தேராக நெல்லையப்பர் தேர் திகழ்கிறது. 450 டன் எடை, 85 அடி உயரம் கொண்ட இந்தத் தேர் ஆடி அசைந்து வருவதை பார்க்க காண கண் கோடி வேண்டும் என பக்தர்கள் மெய்சிலிர்த்து போகும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்.
- முதல்முறையாக நெல்லையப்பர் கோயில் தேரானது 1505 ஆம் ஆண்டு செய்யப்பட்டு மக்களால் இழுக்கப்பட்டது. தற்காலத்தில் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரண்டு தேர்களும் இயந்திரங்களின் துணையுடன் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லையப்பர் முழுக்க பக்தர்களின் சக்தியால் இழுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நிலைக்கு கொண்டு வரப்படுவது சிறப்பானதாகும்.
- இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் கட்டப்படும் ரிஷபக் கொடியோடு தேசியக்கொடியும் பறக்கவிட்டு தேசப்பற்றை உணர்த்தியிருக்கிறார்கள.
- முன்பெல்லாம் மரச்சக்கரம் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தேர் 13 அடுக்குகள் கொண்டதாக இருந்தது. அதனால் தேரை இழுத்து செல்லும்போதும், திருப்பும் போதும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு பின்னர் ஒன்பது அடுக்குகளாக குறைக்கப்பட்டது.
- தேரின் இரும்பு அச்சானது லண்டனில் இருந்து செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நான்கு சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- தேர்வலம் வரும் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மின்சார ஒயர்கள் ஆகியவை காரணமாக தேரின் உயரம் குறைக்கப்பட்டு தற்போது ஐந்து அடுக்குகளாக மட்டுமே அலங்கரிக்கப்படுகிறது. இந்த விழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
- நெல்லையப்பர் தேரின் முன் பகுதியில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி ஆகியோர் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. அது மட்டுமல்லாமல் இருபுறமும் கணபதி, முருகன் காட்சிக் கொடுக்கிறார்கள். மேலும் கங்காளநாதர் சிற்பமானது குண்டோதரன், மான், மோகினியுடன் இருக்கிறது.
- தேருக்கு வலது பக்கத்தில் நடராஜரும், தேரின் பின்பக்கத்தில் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்களும் அமைந்துள்ளது சிறப்பானதாகும். தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் சிற்பம் அமைந்துள்ளது. தேரின் பின்பக்கத்தில் அகத்தியர், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள், முனிவர்கள் என பல சிற்பங்கள் உள்ளது.
- நடமாடும் கலைக்கூடமாக திகழும் இந்தத் தேரை இழுக்கும் போது பக்தர்கள் “ஓம் நமசிவாய… தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
- தேருக்கு முன்னால் கோலாட்டு, திருவாசகக் குழு, மேளதாளம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க நெல்லையப்பர் தேர் வலம் வரும். அதுமட்டுமல்லாமல் 4 வடங்கள் கொண்ட அந்த தேரின் ஒரு வடம் முழுக்க பெண்களுக்கும், மீதி மூன்று வருடங்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இழுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தேரின் வேகத்தை கட்டுப்படுத்துவதும் திரும்புவதற்கும் சறுக்கு கட்டைகள், இரும்பு பிளேட்டுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
- முன்பெல்லாம் வாரக்கணக்கில் இழுக்கப்பட்டு நிலையம் கொண்டு வரப்படும் தேர்கள் அனைத்தும் தற்போது ஒரே நாளில் கொண்டு வரப்பட்டு விடுகிறது. இந்த நாளில் கடும் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் மேக மூட்டமான இதமான சூழல் பக்தர்களுக்கு கிடைக்கும். நெல்லையப்பர் வீதி வலம் வருவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பது சிறப்பானதாகும்.