Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி.. வீட்டில் வழிபட உகந்த நேரம் எது?
கிருஷ்ண ஜெயந்தி 2025 ஆகஸ்ட் 16 அன்று கொண்டாடப்படுகிறது. சாஸ்திரப்படி, கிருஷ்ண பகவான் நள்ளிரவில் பிறந்தவர் என்பதால் அந்நேரத்தில் கொண்டாட்டமானது நடைபெறுகிறது. அதேபோல குழந்தைப்பேறு, திருமண தடை போன்ற பிரச்சனைகளுக்கும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் நல்லது என நம்பப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

கிருஷ்ண ஜெயந்தி
பொதுவாக இந்து மதத்தில் சில பண்டிகைகள் மட்டும் ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடும்படி இருக்கும். அதில் ஒன்று தான் கிருஷ்ண ஜெயந்தி. இது வட மாநிலங்களில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது. அதேபோல் இந்நாள் கோகுலாஷ்டமி எனவும் கூறப்படுகிறது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9வது அவதாரமான கிருஷ்ணர், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வசுதேவர் – வாசுகி தம்பதியினருக்கு 8வது குழந்தையாக பிறந்தார். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்படியாக கிருஷ்ண ஜெயந்தி 2025 ஆம் ஆண்டு ஆடி மாதத்தின் கடைசி நாள் வருவது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் இந்நாளில் எப்போது வழிபடுவது என்பது பற்றிக் காணலாம்.
வழிபட உகந்த நேரம் எது?
சாஸ்திரப்படி பஞ்சமி திதியானது ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கி இரவு 11.13 மணி வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார் என்பதால் 1.41 மணிக்கு வீட்டின் பூஜையறையில் நாம் வழிபாடு மேற்கொள்ளலாம். ஆனால் பல இடங்களில் நள்ளிரவு 12 மணி பிறந்தவுடன் வழிபாடு தொடங்கி விடுகிறது, அவ்வாறு செய்ய நினைத்தால் 12:03 மணி முதல் 12:47 மணிக்குள் செய்யலாம். இந்த காலம் நள்ளிரவில் அவதரித்ததாக நம்பப்படும் கிருஷ்ணரின் அடையாளப் பிறப்பைக் குறிக்கிறது
Also Read: Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
அதேபோல் இந்நாளில் பலரும் உண்ணா நோன்பு கடைபிடிக்கிறார்கள். முடியாதவர்கள் பால், பழம் ஆகியவை எடுத்துக் கொண்டு விரதமிருக்கிறார்கள். கோகுலாஷ்டமி நாளில் காலையில் 7.45 மணி முதல் 8.45 மணி வரை நல்ல நேரம் என்பது வருகிறது. முடிந்தவர்கள் அந்நேரத்தில் வழிபாடு மேற்கொண்டு விரதம் தொடங்கலாம். வழிபாட்டில் எப்போதும் குழந்தை கிருஷ்ணர் ஊஞ்சலில் இருக்கும் கோலம், தவழும் கோலம், வெண்ணெய் சாப்பிடும் கோலம் என எதுவாக வேண்டுமானாலும் வைக்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
அதிகாலையில் எழுந்து புனித நீராடி சுத்தமான ஆடைகளை அணிந்து கிருஷ்ணருக்குரிய உணவுப் பொருட்களை எல்லாம் தயார் செய்ய வேண்டும். மாலையில் வீட்டின் வாசல் படியில் இருந்து பூஜையறை வரை காலடி தடம் வரைந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வாசம் செய்வதாக ஐதீகமாக கொள்ள வேண்டும். மாலையில் 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கிருஷ்ண பகவானுக்கு வழிபாடு செய்து விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
Also Read: Lord Krishna: வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!
கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தை பேறு வேண்டி விரதம் இருக்கலாம். அவர்களுக்கு அடுத்த ஆண்டு கிருஷ்ணரே பிறப்பதாக நம்பப்படுகிறது. அதேபோல் திருமண தடை உள்ள கன்னியர்கள் விரதம் இருந்தால் எப்படி கோபியர்களின் மனம் கவர்ந்தவனாக திகழ்ந்தாரோ அப்படியோ ஒரு கணவன் வந்தடைவான் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)