Gokulashtami 2025: கிருஷ்ண ஜெயந்தி.. 56 வகை உணவுகள் படைக்க காரணம் இதோ!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஆகஸ்ட் 16, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. அப்போது கிருஷ்ணருக்கு 56 வகையான உணவுகள் படைப்பதன் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 56 வகை உணவுப் படைப்பு கிருஷ்ண பக்தர்களின் பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது எனவும் நம்பப்படுகிறது.

Gokulashtami 2025: கிருஷ்ண ஜெயந்தி.. 56 வகை உணவுகள் படைக்க காரணம் இதோ!

கிருஷ்ண ஜெயந்தி

Updated On: 

13 Aug 2025 12:33 PM

பகவான் கிருஷ்ணன் அவதரித்த நாள் தான் கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் இப்பண்டிகை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. கிருஷ்ணர் அனைத்து வகையான சமய மக்களாலும் வழிபடக்கூடியர். ஆவணி மாதத்தில் மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வாசுதேவர் – வாசுகிக்கு 8வது மகனாக ரோகிணி நட்சத்திரத்தில் தேய்பிறை அஷ்டமியில் கிருஷ்ணர் நள்ளிரவில் அவதரித்தார். அதர்மம் நடக்கும் இடத்தில் மக்களை காக்க கிருஷ்ணர் தோன்றியதாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் 9வது அவதாரமாகும். இப்படி பல சிறப்புகளை வாய்ந்த கிருஷ்ண ஜெயந்தி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடு, கோயில் என அத்தனை இடங்களிலும் கிருஷ்ணரை வழிபட்டு பக்தர்கள் மகிழ்வார்கள். அப்போது கிருஷ்ண பகவானுக்கு 56 வகையான உணவுகள் படைக்க இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

கிருஷ்ண பகவான் வழிபாடு

பொதுவாக ஏதேனும் கடவுளின் விசேஷ நாட்கள் என்றால் அவருக்கு பிடித்த பல விதமான உணவுப் பொருள்களை நைவேத்தியமாக வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ணருக்கு உகந்த பலகாரமாக பல உணவுப் பொருட்கள் உள்ளது. ஆனால் இந்த நாளில் பல்வேறு இடங்களில் 56 வகையான உணவுகள் வைத்து வழிபடுவதை மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது சப்பன் போக் என அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் தான் இந்த 56 வகையான உணவுகள் வைத்து வழிபடுவது பெரும்பாலும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Also Read: வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!

56 வகையான உணவு படைப்பு காரணம்

அதற்கான காரணங்களில் ஒன்றாக கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணரை தங்கள் கணவனாக அடைய வேண்டும் என கோபியர்கள் மாதக்கணக்கில் விரதம் இருந்து வழிபட்டார்கள் அவர்கள் விரத காலம் முழுவதும் யமுனை நதியில் நீராடி கார்த்திகாயியினி அன்னையிடம் வேண்டினர். அவர்களின் ஆசைகளை கேட்டறிந்த கிருஷ்ணர், அனைவரும் அதனை அடைவார்கள் என கூறி உறுதியளித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த கோபியர்கள், கிருஷ்ணனான கண்ணனை மகிழ்விக்க, 56 வகையான உணவுப் பொருட்களை படைத்து வழங்கினர். அப்படியாக நாமும் கிருஷ்ணனுக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபட்டால் நம்முடைய விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

அதேபோல் வளர்ப்பு தாயாக இருந்து கிருஷ்ணனை வளர்த்த யசோதா, ஒருநாளைக்கு அவருக்கு 8 முறை உணவளிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதனிடையே கிருஷ்ணன் கோவர்த்தனன் பூஜை செய்ய ஏற்பாடு செய்த நிலையில், கோபமடைந்த இந்திரன் பெருமழையை வரவழைத்தான். ஆனால் கோவர்த்தன மலையை குடையாக தாங்கி கோகுலவாசிகளை கண்ணன் காப்பாற்றினான். இதனைக் கண்டு தன் தவறை எண்ணி இந்திரன் வருந்தினார்.

Also Read: Krishna Jayanthi: 2025 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? – அதன் சிறப்புகள் தெரியுமா?

மொத்தம் 7 நாட்கள் கிருஷ்ண்ர் கோவர்த்தன மலையை தாங்கி சாப்பிடாமல் நின்றதாக சொல்லப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 8 வேலை கணக்கிட்டு 56 வகையான உணவுகள் கிருஷ்ணருக்கு படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)