M.N.Nambiar: 300 முறை சபரிமலை பயணம்.. நம்பியாரின் பக்தி.. பேரன் பகிரும் ஆச்சரிய தகவல்!

நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார், தனது தாத்தாவின் சபரிமலை பயண அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். 7 வயதில் முதல் பயணத்தின் அனுபவங்கள், நம்பியாரின் அமைதி, தியானத்தின் முக்கியத்துவம், 300க்கும் மேற்பட்ட சபரிமலை பயணங்கள், சபரிமலைக்கு நம்பியாருடன் வருகை தந்த பிரபலங்கள் என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

M.N.Nambiar: 300 முறை சபரிமலை பயணம்.. நம்பியாரின் பக்தி.. பேரன் பகிரும் ஆச்சரிய தகவல்!

நம்பியார்

Published: 

13 May 2025 11:36 AM

தமிழ் சினிமாவில் வில்லனாக மக்களுக்கு பரீட்சையமானவர் நம்பியார் (M.N.Nambiar). ஆனால் மிகச்சிறந்த ஆன்மிகவாதிகளில் ஒருவர். சபரிமலை பக்தர்களால் மறைந்த பின்னும் இன்றளவும் நம்பியார் குருசாமி என அழைக்கப்படும் அளவுக்கு பக்தியில் சிறந்து விளங்கினார். அவருடைய பேரன் தீபக் நம்பியார் நேர்காணல் ஒன்றில் தாத்தாவின் சபரிமலை (Sabarimala) அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அதனைப் பற்றி நாம் காணலாம். அதில், “நான் 7 வயதாக இருக்கும்போது தான் தாத்தா நம்பியார் பற்றி புரிந்துக் கொண்டேன். அப்போது தான் முதன்முதலாக அவருடன் சபரிமலைக்கு சென்றேன். ரயிலில் செல்லும்போது தான் நம்பியார் ரொம்ப அமைதியான மனிதர் என்பது புரிந்தது. மிகப்பெரிய ஆன்மிகவாதி என தெரிந்தது. படத்தில் நீங்கள் அவரை எப்படி பார்க்கிறீர்களோ அதற்கு எதிரான ஒரு கேரக்டர் கொண்டவர். பெரிதாக யாரிடமும் பேச மாட்டார். நண்பர்கள் வந்தால் பேசுவார்.

நாங்கள் ரயிலில் செல்லும் தகவல் எப்படியே மக்களுக்கு தெரிந்து விடுகிறது. ஒவ்வொரு ஊரிலும் நிறைய பேர் தாத்தாவை சந்தித்து சாமி சரணம் என குருசாமியை வணங்கி சென்றார்கள். எனக்கு அந்த நிகழ்வு புதுமையாக இருந்தது. எனக்கு சிறு வயதில் மூளையில் ஒரு பிரச்னை இருந்தது. அது சரியானால் 7வது வயதில் சபரிமலைக்கு வருவான் என அம்மா வேண்டிக் கொண்டார்கள். அதனால் அந்த நிகழ்வு இன்றளவும் எனக்கு நியாபகம் இருக்கிறது. பெரிய பாதை வழியாக தான் சபரிமலைக்கு சென்றோம்.

தியானத்தின் முக்கியத்துவம்

நம்பியார் தாத்தாவுக்கு அடிக்கடி தியானம் செய்யும் பழக்கம் உண்டு. அதனை சொல்வது எளிது. சுமார் 20 நிமிடங்கள் மனதில் எதுவும் நினைக்காமல் தியானம் செய்வது மிகப்பெரிய விஷயம். அவ்வாறு செய்வது மனதையும், உடலையும் குளிர்வடைய செய்யும் என அடிக்கடி என்னிடம் சொல்வார். அதனால் ஒருநாளைக்கு கொஞ்ச நேரமாவது தியானம் செய்ய வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளார். தாத்தா முதன்முதலாக சபரிமலைக்கு செல்லும்போது 23 வயது ஆகியிருந்தது. 1942 ஆம் ஆண்டு அவரது வாத்தியார் நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை என்பவர் தான் அழைத்துச் சென்றார். அந்த காலக்கட்டத்தில் சபரிமலை பற்றி பலருக்கும் பெரிய ஐடியா இல்லாமல் இருந்துள்ளது.

2 நாட்கள் திட்டமிட்டு சென்ற அந்த பயணம் 4,5 நாட்கள் வரை நீண்டது. அவர் அடிக்கடி தியானத்தில் ஈடுபட்டார். அப்போது வாத்தியார் நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை நம்பியாரிடம், “இங்கேயே இருக்கிறதா முடிவு பண்ணிட்டியா? நாம் நிறைய நாடகம், படம் சம்பந்தப்பட்ட பணிகளை முடிக்க வேண்டி இருக்கிறது. நீ எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என சொல்லி அழைத்து வந்தார். அப்போது தான் சபரிமலைக்கு தனக்கு இன்னொரு வீடு என்பது தாத்தாவுக்கு புரிந்தது.

300 தடவை சபரிமலை சென்றவர்

1942 ஆம் ஆண்டு தொடங்கி 2003 ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட 60 வருடம், ஆண்டுக்கு 5 முறை என 300 தடவை சபரிமலை சென்று வந்திருக்கிறார். நான் தாத்தாவுடன் பெரிய பாதை, சிறுவழிப்பாதையில் தலா 18 வருடம் என 36 ஆண்டுகள் சென்றிருக்கிறேன். அதன்பிறகு 12 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறேன்.

தாத்தா என்னிடம், சபரிமலைக்கு 41 நாட்கள் நாம் விரதமிருப்பது உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தும் விஷயம். இது மிகவும் நல்ல செயலாகும்” என கூறுவார். மனதில் எந்த வேண்டுதலையும் வைத்துக் கொண்டு செல்ல மாட்டார். சபரிமலையை சுற்றி 18 மலைகள், மனிதனின் நல்ல குணங்கள் 18 வகை உள்ளது. அதனால் அங்கு 18 படிகள் இருப்பதாக என்னிடம் விளக்கியுள்ளார்.

தாத்தாவுடன் சபரிமலைக்கு சென்ற நடிகர்களில் மிக வேகமாக நடந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதேபோல் மிக மெதுவாக நடந்தவர் என்றால் வி.கே.ராமசாமி தான். அதேபோல் ராஜ்குமார், சிவராஜ்குமார், அம்பரீஷ், அமிதாப்பச்சன் என அனைவரும் சபரிமலைக்கு வந்திருக்கிறார்கள் என தீபக் நம்பியார் கூறியிருப்பார்.