நந்திக்கு திருமணம் நடந்த கோயில்.. இந்த சிவாலயம் பற்றி தெரியுமா?

திருமழபாடி வைத்தியநாதர் கோயில், சிவனின் 274 தேவாரத் திருத்தலங்களில் 54வது இடம் பெற்றது. சிலாத முனிவரின் தவத்தின் பயனாக உருவான கோயில், ஜபேசர் - சுயசாம்பிகை திருமணத்தின் சிறப்புமிக்க இடமாகும். நந்திதேவருக்கு திருமணம் நடைபெறும் கோயிலாகவும், உடல் நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது.

நந்திக்கு திருமணம் நடந்த கோயில்.. இந்த சிவாலயம் பற்றி தெரியுமா?

வைத்தியநாத சுவாமி கோயில்

Published: 

13 Jul 2025 12:31 PM

ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு தலப்பெருமையும், வரலாறும் உள்ளது. அந்தந்த கோயில்களில் வெவ்வேறு அவதாரங்களில் வித்யாசமான பெயர்களில் கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர். அத்தனை பேரையும் மக்கள் எவ்வித பாகுபாடின்றியும் வழிபட்டு வருகின்றனர். காரணம் இறை நம்பிக்கை மட்டும் தான். நம்முடைய பிரச்னைகளுக்கும், வளமான வாழ்க்கைக்கும் கடவுள் தீர்வு கொடுக்கிறாரோ இல்லையோ, எதிர்கொண்டு முன்னேறும் நம்பிக்கையை வழங்குகிறார் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அப்படியான நிலையில் அரியலூர் மாவட்டத்தில் திருமழபாடி என்ற ஊரில் அருள்பாலித்து வரும் வைத்தியநாதர் சுவாமி திருக்கோயில் பற்றி நாம் காணலாம். சிவனின் தேவாரப்பாடல் பாடப்பெற்ற 274 திருத்தலங்களில் இந்த கோயிலானது 54வது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த வைத்தியநாதர் சுவாமி திருக்கோயில் நடை தினமும் காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் என்பவர் வசித்து வந்தார். இவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது அவன் முன அசரீரி ஒலியாக தோன்றிய சிவபெருமான் புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், நீ யாகம் செய்யும் நிலத்தை உழும்போது அதில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும், அதில் குழந்தையை எடுத்து வளர்த்து வளர்க்கவும். அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும் என அந்தக் குரல் தெரிவித்தது.

அதன்படி நான்கு தோள்கள், மூன்று கண்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை பெட்டிக்குள் இருப்பதைக் கண்டு முனிவர் மகிழ்ந்தார்.  பெட்டிக்குள் அதனை வைத்து மூடி மீண்டும் பிறந்த போது பழைய அடையாளங்கள் மறைந்து மனித உருவுக்கொண்ட குழந்தையாக மாறியிருந்தது.  உங்களுக்கு ஜபேசர் என பெயரிட்டா.

குழந்தைக்கு 14 வயது ஆன போது இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் குழந்தை உயிருடன் இருக்கும் என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனை அறிந்த ஜபேசர் திருவையாறில் உள்ள அய்யஅரி தீர்த்த குளத்தில் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். நீருக்குள் நின்று தவம் செய்தால் நீர் வாழ் உயிரினங்களால் இவர் கொஞ்சம் கொஞ்சமாக உண்ணப்பட்டார். ஆனாலும் தவத்தை கைவிடாததால் அதனை மெச்சிய சிவபெருமான் ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் கொடுத்தார்.

இதனையடுத்து திருமழபாடியில் ஜபேசருக்கும்,  சுயசாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் ஜபேசர் மீண்டும் சிவனை நோக்கி தவம் புரிந்தார். அதன்படி கைலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமை, சிவகணங்களின் தலைமை பதவி, நந்தி தேவர் என்ற பெயர் ஆகியவற்றைப் பெற்றார்.

Also Read:கிரகங்களின் தாக்கத்தால் அவதியா? – இப்படி விளக்கேற்றினால் தீர்வு

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் காட்சி கொடுக்கும் வைத்தியநாத சுவாமி சுயம்புவாக தோன்றியவர். இங்கு இங்கு அம்மனாக சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். நந்தி தேவருக்கு திருமணம் நடந்த ஸ்தலம் என்பதால் வெகு விமரிசையாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தி பெருமானுக்கு திருமணம் நடைபெறுகிறது. நந்தியின் திருமணத்தை பார்த்தால் முந்தி திருமணம் நடக்கும் என்ற பழமொழி அடிப்படையில் ஏராளமான திருமணமாகாத, திருமண தடையில் உள்ள இளம் வயதினர் பங்கேற்று வழிபடுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஒரே கல்லில் ஆன சோமாஸ் கந்தர் இக்கோயிலில் தனி சன்னதியில் அருளாசி வழங்குகிறார். இங்கு இருக்கும் பிரம்மன் சன்னதிக்கு எதிரே நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக காட்சி கொடுக்கிறது. மேலும் தட்சிணாமூர்த்திகள், கார்த்தியாயினி அம்மன் ஆகியோரும் உள்ளனர்.

Also Read: கண் திருஷ்டியால் அவதியா? – செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு!

இந்தக் கோயிலில் கடுமையான உடல் நல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கிருக்கும் தீர்த்தத்தில் புனித நீராடி வைத்தியநாத சுவாமியை அபிஷேகம் செய்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கிருக்கும் ஜூரகருக்கு புழுங்கலரிசியில் ரசம் சாதம் படைத்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் சிவனுக்குரிய அத்தனை விசேஷ தினங்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் ஒரு முறை நேரில் சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் ;பொறுப்பேற்காது)