திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம்.. நடிகை சாந்தினி நெகிழ்ச்சி!
நடிகை சாந்தினி அவர்களின் ஆன்மீக அனுபவங்கள் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். . தீவிர சிவ பக்தையான அவர் திருவண்ணாமலை கிரிவலத்தில் ருத்ராட்சம் பெற்ற அனுபவம், நாடோடிகள் படப்பிடிப்பின் போது ஆஞ்சநேயர் கோயில் சென்றது போன்ற அதிசயங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது வாராந்திர வழிபாட்டு முறைகள் பற்றியும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நாடோடிகள் படம் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஆன்மிக அனுபவங்களைப் பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றி நாம் காணலாம். அதில், “என்னுடைய இஷ்ட தெய்வம் சிவன் தான். அவரின் சிறப்பு என்னவென்றால் தனக்கு யார் பக்தராக வர வேண்டும் என்பதை சிவன் தான் முடிவு செய்வார். முருகன், விநாயகர் போன்று அவர் கிடையாது. அவர் ரொம்ப சிறப்பு வாய்ந்தவர். அவரை வணங்குபவர்கள் கோபக்காரராக, ஆக்ரோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள் என சொல்வார்கள். மனிதராக பிறந்தால் எல்லாருக்கும் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் அது சிவன் அருளால் குறைந்திருக்கிறது. எனக்கு திருவண்ணாமலை மிகவும் பிடித்த இடம் என்றாலும் ஆரம்பத்தில் கிரிவலம் எல்லாம் சென்றது இல்லை.
கிரிவலத்தில் நேர்ந்த அதிசயம்
அப்படியான நிலையில் சில வருடங்களுக்கு முன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வயதான முதியவர் ஒருவர் என்னிடம் உன் கையை கொஞ்சம் காட்டு என சொன்னார். நான் ஒருவித பயத்துடன் காட்டிய நிலையில் எனக்கு ருத்ராட்சம் வழங்கினார்.ஆனால் எதுவும் பேசவில்லை. இருந்தாலும் இந்த சம்பவம் எனக்கும் சிவனுக்குமான ஒரு பிணைப்பை குறிப்பிடும் என சொல்லலாம்.
வாழ்க்கையில் நாம் எப்போதெல்லாம் சோகத்தை வென்று வருகிறோமோ அப்போதெல்லாம் நிச்சயமாக அதிசயங்கள் நடக்கும் என்பது உண்மை. நான் நாடோடிகள் படத்தில் நடிக்கும்போது ஷூட்டிங்கிறாக நாமக்கல் சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த பிரபலமான ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. அந்த கோயில் பார்க்கவே மிகவும் வித்தியாசமாக கட்டப்பட்டிருக்கும். எதிரெதிர் இருக்கும் 2 கோயில்களிலும் தான் என்னுடைய படத்தின் முதல் காட்சி அமைந்தது.
எனக்கு வாழ்க்கையில் ஏதாவது சோகம் என்றால் உடனே கிரிவலம் சென்று விடுவேன். எனக்கு விபத்து ஏற்பட்டு டாக்டர் 10 மாதங்கள் நடக்க முடியாது என சொன்னார். ஆனால் நான் சிவனிடம், கண்டிப்பாக கிரிவலம் வர வேண்டும் என வேண்டி 3 மாதங்களில் நடந்து அதனை வெற்றிகரமாக செய்து முடித்தேன். அதேபோல் ரமண மகரிஷியின் ஆசிரமத்துக்கு சென்றும் தங்கியிருக்கிறேன். என்னுடைய கையில் அவரின் கொள்கையை டாட்டூவாக குத்தியிருக்கிறேன்.
வாரம் முழுக்க வழிபாடு தான்
நான் திங்கட்கிழமைதோறும் சிவன் தொடர்பான மந்திரங்களை உச்சரிப்பேன். செவ்வாய்கிழமை துர்கை அம்மனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிமை குரு நாள் என்பதால் பாம்பன் சுவாமி கோயிலுக்கும் செல்வேன். வெள்ளிக்கிழமை எந்த கோயிலுக்கும் செல்ல மாட்டேன். அன்று வீட்டில் இருக்கும் பூஜையறையில் வழிபாடு செய்வேன். சனிக்கிழமை சனி பகவான், ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கும் ஒதுக்கி விடுவேன். தினமும் காகத்திற்கு எள் சாதம் வைப்பேன். இப்படியாக எனது வழிபாடு இருக்கும்.
சென்னையில் நிறைய அற்புதமான கோயில்கள் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறது. முருகன் என் அப்பாவின் குலதெய்வம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி, தைப்பூசம் காலத்தில் விரதம் இருப்பேன்” என சாந்தினி தெரிவித்துள்ளார்.