சீரடியில் சாய்பாபா நிகழ்த்திய அதிசயம்.. போஸ் வெங்கட் பகிரும் அனுபவங்கள்!
நடிகர், இயக்குனர் போஸ் வெங்கட் தனது ஆன்மீக அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். சாய்பாபா மீதான அவரது அசாத்தியமான நம்பிக்கையும், சீரடி கோவிலில் நிகழ்ந்த அற்புதங்களையும் விவரித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த போஸ் வெங்கட், ஆன்மீகம் தனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

போஸ் வெங்கட்
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி போஸ் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் அசத்தலான கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் கன்னிமாடம், சார் ஆகிய 2 படங்களையும் இயக்கியுள்ளார். அரசியலைப் பொறுத்தவரை திமுக இணைந்து தனது மேடைப் பேச்சால் பலரையும் கவர்ந்து வரும் அவர் சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றிக் காணலாம். அதில், “என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கிறேன். யாரும் என்னிடம் எதற்காக நீங்கள் சாமி கும்பிடுகிறீர்கள் என கேட்டால், நான் என்னை புத்துணர்வாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி, உணவு ஆகியவற்றை எடுத்துக் கொள்வது போல் ஆன்மீகத்தையும் பின்பற்றுகிறேன் என சொல்வேன்” என கூறினார்.
சிறந்த நண்பர் சாய்பாபா
மேலும் சாய்பாபாவின் அபிமானியான அவர் பல ஆன்மிக விஷயங்களைப் பற்றி பேசினார். அதாவது, “என்னுடைய வாழ்க்கையில் சாய்பாபாவை மிகச்சிறந்த நண்பராக தான் நான் பார்க்கிறேன். எனக்கு அவரால் நிறைய அற்புதங்கள் நடந்திருக்கிறது. நான் என்னுடைய நண்பர்கள் 2 பேருடன் ஒரு முறை சீரடியில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்கு சென்றிருந்தேன். என்னுடன் வந்த இரண்டு நண்பர்களுக்கும் சாய்பாபா மீது பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சென்ற நேரத்தில் கோயில் நடை அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு காத்திருந்தோம்.
அப்போது அங்கு என் அருகில் சாய்பாபா போன்ற தோற்றத்தில் இருந்த நபர் ஒருவர் வந்தமர்ந்தார். இதனைக் கண்டு என்னுடன் வந்த நண்பர் ஒருவர் கிண்டல் செய்தார். ஆனால் அந்த நபர் நீண்ட நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கோயில் கதவு அடைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டமும் அலைமோதியது. அந்த நபரின் பார்வை எனக்கு ஒரு மாதிரி இருந்தாலும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கோயில் கதவு திறந்தவுடன் பார்த்தால் அந்த நபர் அங்கில்லை.
சீரடியில் நடந்த ஆதிசயம்
எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் கூட சற்றும் நகர முடியாத ஒரு கூட்டத்தில் இந்த நபர் எங்கு போனார் என தெரியவில்லை. இதை தொடர்ந்து நாங்கள் கோயிலுக்குள் சென்றோம். உள்ளே நுழைந்தது, அப்போது அங்கிருந்த நான்கு அர்ச்சகர்கள் வேகமாக என் அருகே ஓடி வந்து வணக்கம் வைத்து கதவை திறந்து விட்டார்கள். பின்னர் அங்கிருந்த சமாதி அறைக்கு நானும் என் நண்பரும் செல்ல அனுமதித்தார்கள். மற்றொரு நண்பரை அனுமதிக்கவில்லை.
சீரடியில் இருக்கும் அந்த சமாதியை அவ்வளவு எளிதில் வழிபட முடியாது. ஆனால் நான் யார் என்றே தெரியாத நிலையில் எப்படி எனக்காக அதனை திறந்து விட்டார்கள் என புரியவில்லை. பின்னர் வெளியே வந்து ஓரிடத்தில் அமர்ந்தோம். அதுவரை நடந்ததை எதுவும் என் நண்பர்களில் ஒருவன் நம்பவே இல்லை. இதற்கிடையில் நாங்கள் இருந்த இடத்தில் வேப்பமரம் இருந்தது. ஆனால் அதிலிருந்து எதுவும் கீழே விழாதபடி சுற்றிலும் வளை போடப்பட்டிருந்தது.
இப்படியான நிலையில் என்னுடன் வந்த நண்பர் ஒருவர் நடந்ததை எல்லாம் கிண்டல் செய்தார். மேலும் நான் சாய்பாபாவை நம்ப வேண்டும் என்றால் என் கண்ணுக்கு தெரிந்த இடத்தில் ஒரே ஒரு வேப்ப இலை விழுந்தால் போதும் என கூறினார். அவர் சொல்லி முடித்தவுடன் மேல் இருந்து ஒரு சிறிய கிளை வந்து விழுந்தது. இப்படியாக நிறைய அற்புதங்கள் எனக்கு சீரடியில் நடைபெற்றுள்ளது” என போஸ் வெங்கட் கூறியுள்ளார்.