Aadi Perukku: ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் எப்போது?
ஆடிப்பெருக்கு, தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாள் விவசாயிகளின் அறுவடைக்கு ஏற்ற நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தாலிக்கயிறு மாற்றி தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டுகின்றனர். 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பதே தமிழர்களின் வாழ்வியலில் கலந்த மிக உன்னதமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்து மதத்தில் திதிகள் மற்றும் கிழமைகள் கொண்டு ஒவ்வொரு விசேஷ தினங்களும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு பண்டிகை மட்டும் நாட்கள் எண்ணிக்கையில் கணக்கிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதுதான் ஆடிப்பெருக்கு. வளர்பிறையோ அல்லது தேய்பிறையோ எதுவாக இருந்தாலும் ஆடி மாதத்தின் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு என கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு என்றால் பலருக்கும் தாலிக்கயிறு மாற்ற மிக உன்னதமான நாள். மேலும் இந்த நாளில் என்ன செயல்கள் செய்தாலும் அது நன்மையின் ஊற்றாக பெருக்கெடுக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் உண்மையில் ஆடிப்பெருக்கு என்பது விவசாயிகளுக்கானது. ஆற்றில் ஆடி மாதம் பெய்த மழையினால் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை தான் ஆடிப்பெருக்கு என அன்னாளில் குறிப்பிட்டு வந்துள்ளார்கள். இதனை கணக்கிட்டு நெல் கரும்பு போன்ற பயிர்களை விதைத்தால் சரியாக ஆறு மாதத்தில் பொங்கலுக்கு முன்பாக அறுவடை செய்ய முடியும் என்பதை கணக்கில் கொண்டே ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு எப்போது?
இப்படியான நிலையில் இந்த ஆடிப்பெருக்கானது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.. இந்த நாளில் திருமணமான புதுமண தம்பதிகள் தங்கள் தாலியைப் பிரித்து மாற்றிக் கொள்ளவும், ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தாலி கயிறு அல்லது சரடு மாற்றிக்கொண்டு தங்களின் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், தாங்கள் சுமங்கலிகளாக நீண்ட காலம் இருக்க வேண்டும் என இந்நாளில் வேண்டிக் கொள்வார்கள்.
Also Read: என்ன வேண்டினாலும் நிறைவேறும்.. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மகிமை!
தாலிக்கயிறு மாற்றிக் கொள்ள நல்ல நேரம்
ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு அல்லது தாலிச்சரடு மாற்றிக் கொள்வதற்கான நல்ல நேரம் பற்றி தெரிந்து கொள்வோம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராகு காலம் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை இருக்கிறது. அதேபோல் எமகண்டம் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை வருகிறது. இந்த நாளில் நல்ல நேரமானது காலை 7:45 மணி முதல் 8.45 மணி வரையும், மாலையில் 3.15 மணி முதல் 4.15 மணி வரையும் இருக்கிறது.
ஆக ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு அல்லது தாலிச்சரடு மாற்றிக்கொள்ள விரும்பும் பெண்கள் சூரிய உதயம் தொடங்கி முற்பகல் 12 மணிக்குள் அதனை மாற்ற வேண்டும். 12 மணிக்கு மேல் சூரியன் மேற்கு திசையில் மறையும் காலம் தொடங்குவதால் முன்கூட்டியே செய்வது சிறப்பானதாகும்.
Also Read: முருகனின் 108 பெயர்களில் அர்ச்சனை செய்தால் இதெல்லாம் நடக்குமா?
கயிறை நன்றாக மஞ்சளில் நனைத்தும், தாலியை சுத்தம் செய்து அம்மன் முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தாலிக்கயிறை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த கயிறை மாற்றும்போது கண்டிப்பாக உங்களது கணவர் அல்லது சுமங்கலி பெண்கள் யாராவது அருகில் இருக்க வேண்டும். மேலும் தாலி கயிறு மாற்ற அமர்ந்து விட்டால் அதனை முடிக்கும் வரை அந்த இடத்தில் இருந்து எழுந்திருக்கக் கூடாது. முடிந்தவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடியும், முடியாதவர்கள் வீட்டிலும் தாலிக்கயிறு மாற்றலாம்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)