Aadi Amavasya: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இதை செய்யாதீங்க!
ஆடி அமாவாசை 2025 ஜூலை 24 அன்று வருகிறது. இந்த நாள் முன்னோர் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமானது. அதேபோல் இந்நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அன்று வீடு சுத்தம் செய்யவோ, நீண்ட நேரம் தூங்கவோ கூடாது. முன்னோர்களின் படங்களை ஒழுங்காக வைத்து வழிபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமாவாசை (Amavasya) என்பது சாஸ்திரத்தில் முன்னோர்களை வழிபட உகந்த தினமாகும். ஓர் ஆண்டில் 12 அமாவாசை திதிகள் வரும். எல்லோராலும் மாதந்தோறும் வரும் அமாவாசையில் முன்னோர் வழிபாட்டில் ஈடுபட முடியாது, அதனால் தான் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசையில் கண்டிப்பாக முன்னோர்களை வழிபட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் நாம் வழிபாட்டில் ஈடுபட்டால் ஆண்டு முழுவதும் முன்னோர்களை வணங்கி அவர்களை திருப்திப்படுத்திய நிலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆடி அமாவாசை 2025 (Aadi Amavasai 2025) ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இந்த நாளில் நாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றிக் காணலாம்.
முதலாவதாக, ஆடி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம், திதி கண்டிப்பாக கொடுக்க வேண்டும். வேலை,பணிச்சூழலை காரணம் காட்டி அதனை தவிர்க்கக்கூடாது. அடுத்ததாக அமாவாசை நாளில் வாசலில் கோலமிடக்கூடாது. மேலும் ஆன்மிக விசேஷ நாள் என்பதால் அன்றைய நாளில் வீட்டின் அறைகள், சமையலறை, பூஜையறை என எதையும் சுத்தம் செய்யக்கூடாது. எதும் செய்வதாக இருந்தால் முந்தைய நாள் அல்லது அமாவாசை திதி தொடங்குவதற்கு முன்னால் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2025 ஆடி அமாவாசை.. தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்!
அடுத்ததாக அமாவாசை நாளில் நீண்ட நேரம் தூங்கக்கூடாது. அன்று அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள அனைவரும் புனித நீராட வேண்டும். பின்னர் இறை வழிபாடு இல்லாவிட்டாலும் முன்னோர்களையாவது வணங்க வேண்டும். அதேசமயம் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து விட்டோமே என நினைக்கக்கூடாது. வீட்டில் இருக்கும் முன்னோர்கள் படத்தை சுத்தம் செய்து அவர்கள் முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். இது அகல் விளக்காகவும், நல்லெண்ணெயாகவும் இருப்பது சிறந்தது.
முன்னோர் வழிபாட்டில் அவர்களுக்கு பிடித்த பொருட்களை எல்லாம் படையல் போடும் வழக்கம் இருக்கும். இந்த உணவுகளை வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் இரத்த உறவாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி கொடுக்கக்கூடாது. அதேபோல் அந்நாளில் வெளிநபர்களை வீட்டிற்கு அழைத்து வந்து உணவளிக்கக்கூடாது. அவ்வாறு அளிப்பதாக இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்திய பிறகு கொடுக்கலாம்.
இதையும் படிங்க: அஷ்டமியில் இதெல்லாம் செய்தால் இரட்டிப்பு பலன்கள் தெரியுமா?
முன்னோர்களுக்கு படையலிடும் இலையானது ஒற்றை இலக்கத்தில் இருக்கக்கூடாது. குறைந்தப்பட்சம் இரண்டு, அதிகப்பட்சம் நான்கு இலைகள் (சிறிய இலையாக இருக்கும் பட்சத்தில்) இருக்கலாம். வீட்டில் மறைந்த முன்னோர்கள் போட்டோக்களை கிடைக்கும் இடத்தில் வைத்து வழிபட வேண்டாம். ஒரே இடத்தில் வரிசைப்படி வைத்து வழிபடவும். இன்றைய நாளில் நகம், முடி வெட்டக்கூடாது. பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்ககூடாது.
நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் என ஆன்மிக அடையாளங்கள் இருக்க வேண்டும். பெண்கள் குளித்து விட்டு தான் சமையல் செய்ய வேண்டும். அதேபோல் காகத்திற்கு உணவளிக்காமல் சாப்பிடக்கூடாது. இந்நாளில் முன்னோர் வழிபாட்டில் நிச்சயம் அவர்கள் வாழ்க்கை முறை பற்றிய பேச்சு இருக்கும். அதில் பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும்.
(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)