Aadi Amavasai: ஆடி அமாவாசை.. வீட்டில் தர்ப்பணம் கொடுக்கலாமா? – வழிமுறைகள் இதோ!
அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு (தர்ப்பணம்) செய்வது மிகவும் புண்ணியமானது. நீர்நிலைக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, தர்ப்பை, எள், நீர், சந்தனம், பூக்கள் பயன்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சாஸ்திரத்தில் முன்னோர் வழிபாட்டிற்கென ஏற்ற நாளாக அமாவாசை உள்ளது. இந்நாளில் நாம் நம் வீட்டில் மறைந்த முன்னோர்களை நினைத்து திதி, தர்ப்பணம், விரதம், வழிபாடு ஆகியவற்றை மேற்கொண்டால் பல்வேறு விதமான புண்ணியங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொதுவாக திதி, தர்ப்பணம் ஆகியவை ஓடும் நீர்நிலைகளில் தான் கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆனால் சிலர் குளம், குட்டை, வீடுகளில் கூட தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார்கள். அப்படியாக வீடுகளில் நாம் தர்ப்பணம் செய்யலாமா என்பது பற்றியும், அப்படியே செய்வதாக இருந்தால் எப்படியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம்.
பொதுவாக அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசிகளைப் பெறவும், நமக்கு ஏற்பட்டு பித்ரு தோஷத்தை நீக்குவதற்கும் ஏற்ற வழிமுறைகளாக பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு ஆடி அமாவாசையானது ஜூலை 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் அதிகாலை 3.06 மணிக்கு அமாவாசை திதியானது தொடங்கி நாள் முழுவதும் இருக்கிறது. அதேசமயம் தர்ப்பணம் செய்வதாக இருந்தால் காலை 7.30 மணிக்கு மேல் தொடங்கி பகல் 12 மணிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: கடன் பிரச்னைகளை தீர்க்கும் ஆடி செவ்வாய் வழிபாடு.. எப்படி செய்ய வேண்டும்?
வீட்டில் தர்ப்பணம் செய்வது எப்படி?
இந்நாளில் நாம் நீர்நிலைகளுக்கு செல்ல முடியாவிட்டால் சில வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம். அதன்படி தர்ப்பணம் செய்ய வீட்டில் உகந்த இடத்தை தேர்வு செய்யவும். குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து அமர வேண்டும்.தர்ப்பணம் செய்ய ஏதுவாக தர்ப்பை புல், எள்ளு, நீர், சந்தனம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து எள்ளும் தண்ணீரும் கலந்து கொள்ளவும். முன்னோர்களின் பெயர்களை நினைத்து அவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என எள் நீரை இறைக்கவும். இவ்வாறு செய்யும்போது ஆட்காட்டி விரல் மற்றும் மற்றும் கட்டை விரல் மட்டுமே செயல்பட வேண்டும். மற்ற 3 விரல்கள் மூடி இருக்க வேண்டும், இந்த தண்ணீரை ஏதேனும் மரத்திற்கு போகும்படி செய்யலாம். குறைந்தப்பட்சம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு வழிபாடு செய்யலாம். பெயர் தெரியவில்லை கேட்டு வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
Also Read: Deepam: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இதன்பின்னர் வீட்டின் பூஜையறையில் முன்னோர் படங்களை வைத்து அவர்களுக்கு பிடித்த படையலிட்டு வழிபடலாம். இன்றைய நாளில் இயலாதவர்களுக்கு அன்னதானம், பொருளுதவி செய்யலாம். பெற்றவர்களை இழந்தவர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்ய வேண்டும். அதேசமயம் பெண்கள் கணவர் உயிருடன் இருந்தால் முன்னோர் வழிபாடு மட்டுமே செய்யலாம். தர்ப்பணம் செய்யக்கூடாது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)