Year-Ender 2025: லடாக்கிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரை.. அதிகாரத்தை எதிர்த்த Gen Z தலைமுறை.. ஒரு பார்வை!!
Gen-Z’s take to the streets: 2025ல் Gen-Z இளைஞர்கள் அதிகாரம், ஆட்சி அமைப்புகளுக்கு புதிய சவாலை உருவாக்கியதும், அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கான ஒரு புதிய தலைமுறையின் எழுச்சியை உலகிற்கு வெளிப்படுத்தியது. நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இளைஞர்கள் ஒரு பொதுச் சமூகமாக இணைந்து அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தினர்.

2025 ஆம் ஆண்டு 'ஜென்-சி' (Gen-Z) இளைஞர்களால் உலகில் ஒரு வரலாற்றில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள், தங்கள் குரல் அரசுக்கு கேட்கப்படாதபோது வீதிகளில் இறங்கத் தயாராக இருந்ததை வெளிப்படுத்திய ஆண்டாக அமைந்தது. அதன்படி, ஆப்பிரிக்கா முதல் ஐரோப்பா வரையிலும், தென்கிழக்கு ஆசியா முதல் லத்தீன் அமெரிக்கா வரையிலும், 2025 ஆம் ஆண்டு என்பது, மக்கள் அரசு நிறுவனங்களுக்கு எதிரான தங்கள் கோபத்தை வீதிகளில் வெளிப்படுத்திய ஒரு ஆண்டாக அமைந்தது. வெவ்வேறு நாடுகளில் இப்போரட்டங்கள் நடைபெற்றிருந்தாலும், பெரும்பாலான இடங்களில் காரணங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருந்தன. ஊழல், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி ஆகியவையே காரணங்களாக இருந்தன.

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள், பொருளாதார மந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைர்கள் கடும் கோபத்தில் இருந்த நிலையில், செப்டம்பர் 4, 2025 அன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையே, நாடு தழுவிய போராட்டத்திற்கு காரணியாக அமைந்தது. நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாக மாறின. இதில், 60 பேர் உயிரிழந்தனர். கே.பி.சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்தியாவில், தனி யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து, சிறப்பு அதிகாரம் கோரி போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் அங்கு ஒரு கொந்தளிப்பான காலகட்டம் நிலவியது. அந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், நான்கு பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இது, போராட்டங்களின் முன்னணியில் இருந்த பிரபல விஞ்ஞானியும் ஆர்வலருமான சோனம் வாங்சுக்கின் கைதுக்கும் வழிவகுத்தது. அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

வட மாசிடோனியாவில் நவம்பர் மாதம் ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, லஞ்சம் மற்றும் அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விபத்தில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், அந்த இரவு விடுதி போலி உரிமத்துடன் சட்டவிரோதமாக இயங்கி வந்தது என்பதும், அந்த உரிமத்தை அது அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துப் பெற்றிருந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கும் நீதி கேட்டு போராட்டம் வெடித்தது.

இந்தோனேசியா மற்றும் மொராக்கோவிலும் Gen z போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் இந்தோனேசிய இளைஞர்கள் போராடினர். இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மொராக்கோவில் 2030 FIFA கால்பந்து உலகக் கோப்பைக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதே வேளையில், கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கொதித்தெழுதந்தனர்.

ஸ்பெயினில், பிரதமர் பெட்ரோ சான்செஸின் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் மற்றும் ஊழல் சர்ச்சைகளைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சான்செஸின் மனைவிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த காவல் பிரிவுக்கு எதிராக சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்கும் ஆடியோ பதிவுகள் கசிந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் வெடித்தன. அறிக்கைகளின்படி, "மாஃபியாவா அல்லது ஜனநாயகமா" என்ற பதாகையின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.