பைக்கில் கிளட்ச் பிரச்னையா? – ஈஸியா கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்!
இருசக்கர வாகனங்களில் கிளட்ச் பிளேட் மிக முக்கிய பாகமாகும். கியர் மாற்றும் போது ஏற்படும் சிரமம், கிளட்ச் பிடிக்கும் போது வழக்கத்தை விட லேசாக இருத்தல், கியர் பாக்ஸில் அலறல் சத்தம், கியர் விழ தாமதம் ஆகியவை கிளட்ச் பிளேட் தேய்மானத்தின் அறிகுறிகளாகும். இதனை உடனே சரி செய்யாவிட்டால் வாகன சேதம் ஏற்படலாம்.

உலகளவில் பைக்குகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய இருசக்கர வாகனங்கள் கியருடன், கியர் இல்லாமலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய வாகனங்களில் கிளட்ச் பிளேட் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பைக்கில் இஞ்சினுக்கு அடுத்ததாக மிக முக்கிய பாகமாக இது செயல்படுகிறது. பைக்குகளை வெவ்வெறு வேகங்களில் இயக்கும்போது கியர்களை மாற்றுவதற்கு கிளட்ச் பிளேட்கள் தேவையாகும். ஆனால் இத்தகைய கிளெட்ச் பிளேட்கள் பற்றி பெரும்பாலான வாகன ஓட்டிகளிடையே போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை என வாகனங்களை சர்வீஸ் பார்க்கும் நபர்கள் தெரிவித்துள்ளனர். பைக்கில் கிளட்ச் சம்பந்தப்பட்ட பிரச்னையை நாம் எப்படி கண்டறிவது பற்றி காணலாம்.
இதனை சில அறிகுறிகள் மூலம் நாம் அறியலாம். இதனால் கிளட்ச் பிளேட் தேய்மானம் அடைவது தொடங்கி வாகனத்தில் பழுது ஏற்படுவது வரை முன்கூட்டியே நம்மால் அறிந்துக் கொள்ள முடியும். ஒரு பைக்கில் கிளட்ச் பிளேட்டானது என்ஜினை டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கிறது. அதன்மூலம் தடையில்லாமல் கியர் மாற்ற முடியும். வேகமாக செல்லும்போதும், வேகக் குறைப்பு செய்யும்போது கிளட்ச் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிளட்ச் இல்லாவிட்டால் கியர் பைக்குகளைப் பொறுத்தவரை எதுவும் செய்யவே முடியாது என சொல்லலாம்.
எவ்வாறு கண்டறியலாம்?
உங்களுடைய பைக்கில் கிளட்ச் பிளேட்டை மாற்ற வேண்டுமா என்பதை பின்வரும் பிரச்னைகளை வைத்து தெரிந்துக் கொள்ளலாம். முதலாவதாக கியர்களை மாற்றும்போது அது கடினமாக செயலாக உங்களுக்கு தோன்றலாம். மேலும் கிளட்ச் பிரேக்கை பிடிக்கும்போது அது வழக்கத்தை விட டைட்டாக இல்லாமல் இருந்தால் கிளட்ச் பிளேட் தேய்மானத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அதேபோல் சில நேரங்களில் கியர்களை மாற்றும்போது கியர் பாக்ஸில் அலறல் சத்தம் கேட்கலாம். அதேபோல் கியர் விழ தாமதம் ஆகலாம். இப்படி பல பிரச்னைகள் கிளட் பிளேட் தேய்மானத்தால் உண்டாகலாம்.
நீங்கள் கிளட்சை பிரேக்கை பிடித்து விட்டு விடும்போது பைக் கொஞ்சம் வேகமாக முன்னேறுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் கிளட்ச் பிளேட் தேய்மானத்தால் முந்தைய வேகம் வண்டியில் இருக்காது. மேலும் வேகமாக செல்லும்போது திடீரென வண்டி வேகம் குறையும் நிலைக்கு செல்லும். அதேபோல் சிக்னல், கூட்ட நெரிசல் பகுதியில் பைக் செயல்பாட்டில் வைக்க கிளட்சை பிடித்துக் கொண்டு ஓட்டியிருப்பீர்கள். அப்படியான சூழலில் அடிக்கடி ஆஃப் ஆவது, இஞ்சினில் இருந்து சத்தம் வருவது என கிளட்ச் பிளேட் தேய்மானத்தை கண்டுபிடிக்கலாம்.
எப்போதும் வாகனத்தை ஓட்டும்போது கிளட்சை அழுத்திக் கொண்டே ஆக்ஸிலேட்டர் கொடுக்காதீர்கள். தேவைப்படும் இடத்தில் அதனை அழுத்த வேண்டும். இதனால் வாகனங்களும் நீண்ட ஆயுளைப் பெறும் என சொல்லப்பட்டுள்ளது.