Monsoon Produce Guide: மழைக்காலத்தில் எந்த காய்கறிகளை வாங்கக் கூடாது..? எதை வாங்குவது, எப்படி சுத்தம் செய்வது?
Rainy Season Vegetables: மழைக்காலத்தில் காய்கறிகளில் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், வெண்டைக்காய் போன்றவற்றில் இவை அதிகம். காய்கறிகளை நன்கு தேர்ந்தெடுத்து, உப்பு கலந்த சூடான நீரில் கழுவி, உடனே சமைப்பது முக்கியம். இலை காய்கறிகளை கவனமாக தேர்வு செய்யவும். சரியான காய்கறி தேர்வு, சுத்தம் செய்தல் மூலம் ஃபுட் பாய்சனிலிருந்து தப்பிக்கலாம்.

காய்கறி
வெயிலுக்கு பிறகு வரும் மழைக்காலம் (Monsoon) பசுமை, குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை தரும். ஆனால், அதே நேரத்தில் இந்த பருவ மாற்றம் பல நோய்களையும், உடல்நலப் பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தும். அதிலும், குறிப்பாக உணவை பொறுத்தவரை, சரியான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம். சிறிது கவனக்குறைவு கூட வயிற்றில் பெரிய பிரச்சனையை உண்டு செய்யும். மார்க்கெட்டில் கிடைக்கும் பச்சை காய்கறிகள் (Vegetables) புதியதாக தோன்றலாம். ஆனால், மழைக்காலத்தில் காய்கறிகளில் மறைந்திருக்கும் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கண்ணும் தெரியாமல் இருந்துவிடும். மழைக்காலத்தில் இந்தப் பூச்சிகள் வேகமாக வளர்ந்து காய்கறிகளுக்குள் தங்களது இருப்பிடத்தை அதிகரிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அவற்றைச் சரிபார்க்காமல் வீட்டிற்குக் கொண்டு வந்து, சரியாக சுத்தம் செய்யாமல் சமைத்தால், அவை கடுமையான தொற்று, ஃபுட் பாய்சன் (Food Poison) மற்றும் வயிற்று நோயை ஏற்படுத்தும். எனவே மழைக்காலத்தில் எந்த காய்கறிகளை வாங்கக்கூடாது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
காலிஃபிளவர்:
மழைக்காலத்தில் காலிஃபிளவருக்குள் இருக்கும் சிறிய பூச்சிகள், முட்டைகள் மற்றும் பூஞ்சைகள் அதிகமாக வளரும். அதேநேரத்தில், காலிஃபிளவரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை முதலில் நன்றாக வெட்டி உப்பு கலந்த வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் சிறிது நேரம் வேகவைத்து அதன்பின் சமைக்கலாம்.
முட்டைக்கோஸ்:
காலிஃபிளவர் போன்று முட்டைக்கோஸின் அடுக்குகளுக்கு இடையிலும் பூச்சிகள், பூஞ்சை மற்றும் அழுக்குகள் பெரும்பாலும் குவிந்து இருக்கும். இந்த காய்கறி மழைக்காலங்களில் தொற்று ஏற்படக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும். நீங்கள் அதை வாங்கினாலும், வெளிப்புற அடுக்குகளை முழுவதுமாக அகற்றி நன்கு சுத்தம் செய்வது நல்லது.
வெண்டை காய்:
வெண்டை காயில் இருக்கும் மேற்பரப்பு ஒட்டும் தன்மை கொண்டது. மழை பெய்யும் நாட்களில் வெண்டை காயில் பூச்சிகள் அல்லது பூஞ்சைகள் அதில் விரைவாக வளரும். சில நேரங்களில் உள்ளே பூச்சிகளின் கூட்டை ஏற்படுத்தும். இதனையும், கவனமாகப் பார்க்காவிட்டால் அதை கவனிக்காமல் சாப்பிடும் அபாயமும் உள்ளது.
கீரை போன்ற இலை காய்கறிகள்:
மழைக்காலத்தில் மண்ணும் பாக்டீரியாவும் இந்த இலைக் காய்கறிகளில் ஒட்டிக்கொள்கின்றன. ஈரப்பதம் காரணமாக இந்தக் காய்கறிகள் விரைவாக அழுகி, பூச்சிகளும் அவற்றில் வளரக்கூடும். எனவே அவற்றை கவனமாகத் தேர்ந்தெடுத்து நன்கு கழுவவும்.
மழைக்காலத்தில் காய்கறிகள் வாங்கும்போது என்ன செய்ய வேண்டும்?
- காய்கறிகளை வாங்குவதற்கு முன், அவை அழுகியவை, உடைந்தவையா அல்லது ஒட்டும் தன்மை கொண்டவையாக இருக்கிறது என்பதை சோதித்து பார்த்து வாங்குங்கள்.
- மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகளை உப்பு அல்லது வினிகர் சேர்த்து சூடான நீரில் கழுவ வேண்டும்.
- புதிய மற்றும் கடினமான காய்கறிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
- காய்கறிகளைக் கழுவி உடனடியாக சமைக்கவும், நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம்.