பணி அழுத்தம், தவறாக உட்காரும் பழக்கம் – முதுகு தண்டை பாதிக்கும் காரணிகள் – தவிர்ப்பது எப்படி?
Spine Health Alert : நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்பது, தவறான உட்காரும் நிலை, மற்றும் மன அழுத்தம் ஆகியவை கழுத்து மற்றும் முதுகுத் தண்டு வலிக்கு காரணமாகிறது. சில நேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தவிர்ப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, அதிக வேலை அழுத்தம் காரணமாக கழுத்து மற்றும் முதுகுத்தண்டு (Spine) பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் இந்த பிரச்னைக்கு அதிகம் ஆளாகி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பணி அழுத்தம் காரணமாக நகர கூட முடியாத நிலையில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக வொர்க் ஃபிரம் ஹோம் (Work From Home) எனப்படும் வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் இந்த பிரச்னையை அதிகம் எதிர்கொள்கிறார்கள். காரணம் அலுவலகங்களில் சரியான இருக்கை வசதி இருக்கும். ஆனால் சாதாரண சேர் அல்லது தரையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். நீண்ட நேரம் தவறான முறையில் உட்கார்ந்து வேலை செய்வது அவர்களுக்கு முதுகு தண்டு, கழுத்து போன்ற இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இளைஞர்களிடையே அதிகரிக்கும் முதுகுத்தண்டு பிரச்னை
தவறான உட்காரும் நிலை, அதிக பணி அழுத்தம் மற்றும் மனஅழுத்தம் என இவை அனைத்தும் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் வலி மற்றும் அதன் காரணமாக மனச்சோர்வு ஆகியவை ஏற்படுகின்ரன. அதிக நேரம் கணினி முன் உட்காரும் அலுவலக ஊழியர்கள், குறிப்பாக ஐடி துறையினர், இந்த பிரச்சனைகளுக்கு அதிகமாக ஆளாகின்றனர். வருடத்துக்கு சராசரியாக 55% பேர் கழுத்து வலி மற்றும் 64% பேர் கீழ்முதுகு வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கழுத்து மற்றும் முதுகுத்தண்டு பிரச்னைகளுக்கு காரணம்
- நேராக உட்காரமல் லேப்டாப்பை பார்த்து குனிந்து உட்காருவது, முதுகை அதிக நேரம் வளைத்த நிலையில் வைத்திருப்பது , தோள்களை முன்னோக்கி நகர்த்துவது போன்ற தவறான நிலைகள் முதுகுத்தண்டில் அழுத்தம் ஏற்படுத்தி வலிக்கு காரணமாக அமைந்துள்ளன.
- நிறைய வேலைகள், பணி அழுத்தம், சக ஊழியர்களுடன் பிரச்னை போன்றவை உடலில் கார்டிசால் எனும் ஹார்மோனின் அளவை அதிகரிக்கச் செய்து நம்மை மனதளவில் பெரிதும் தாக்குகின்றன. இது முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகள் இறுக்கமாகி வலியை ஏற்படுத்துகின்றன.
- நமது உடல் எப்பொழுதும் இயங்குவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பது ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. உடலின் தசைகள் பலவீனமாகிறது மேலும் மூட்டு மற்றும் முதுகு செயல்பாடுகளை பாதிக்கிறது.
தற்காப்பு வழிமுறைகள்:
-
நம் கம்ப்யூட்டர் மானிட்டரின் திரை நமது கண்ணிற்கு நேராக இருக்க வேண்டும்.
-
கீபோர்டு, மவுஸ் ஆகியவை சரியான இடத்தில் இருக்க வேண்டும். நமது கைக்கு எட்டாத உயரத்தில் வைத்தால் அதனால் நமது முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்.
-
முதுகு, கழுத்து ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் அதற்கு ஏற்ற சேரை பயன்படுத்த வேண்டும்.
-
கால்களை பாதங்கள் முழுமையாக தரையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.
-
அவ்வப்போது சிறிது நடந்து விட்டு வாருங்கள். மேலும் வேலைக்கு நடுவே சிறு சிறு உடற்பயிற்சிகள் நம் உடலை பாதுகாக்கும்.
தொடர்ச்சியான அலுவலக வேலை மற்றும் தவறாக அமரும் நிலை காரணமாக முதுகுத்தண்டின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை தவிர்க்க, நிறுவனங்களும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக பணியாளர்கள் தேவையில்லாமல் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வருவர் என்பதால் வேலை பாதிக்காது. ஆனால் அதை விடுத்து அவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தால் வேலை பாதிப்பதோடு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)