Dal Benefits: உணவில் பருப்பை தவிர்ப்பவரா நீங்கள்? – அப்ப இதை தெரிஞ்சுகோங்க!
பலரும் ஆரோக்கியமான உணவை விரும்புகின்றனர். ஆனால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு என்ற பெயரில் பருப்பைத் தவிர்ப்பது தவறான பழக்கமாகும். பருப்பில் புரதம், நார்ச்சத்து, மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சமச்சீர் உணவில் பருப்பைச் சேர்ப்பதால் எடை இழப்பு மற்றும் நீரிழிவு நோய் அபாயம் குறையும்.

பருப்பின் நன்மைகள்
பலருக்கும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நோய் இல்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும். ஆனால் நாம் சாப்பிடுவது எல்லாம் சத்தான உணவா என கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் வேண்டாம் என ஒதுக்கும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல என்பதை உணர வேண்டும். வயதுக்கான பருவம் ஏற ஏற நம் உணவுப்பழக்கமும் மாறும். அப்போது முன்னால் வேண்டாம் என ஒதுக்கிய உணவுகளை இப்போது சேர்த்துக் கொள்ள வேண்டிய சூழல் வரும். நம்முடைய உணவு அத்தனை ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம் இப்படியான நிலையில் தாவர புரத மூலமாக விளங்கும் பருப்பை, நம்முடைய சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதனைப் பற்றிக் காணலாம்.
பருப்பை தவிர்க்காதீர்கள்
இந்திய உணவின் முக்கியப் பொருளான பருப்பானது கார்போஹைட்ரேட் நிறைந்தது. அதுமட்டுமல்ல புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது. ஆனால் ஆரோக்கியமான உடலமைப்பு வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுவதால் பருப்பின் நன்மைகள் அறியாமலேயே அதனை நாம் தவிர்க்கிறோம். டெல்லியில் உள்ள தேசிய நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொழுப்பு அறக்கட்டளை (NDOC) ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் சீமா குலாட்டி ஒரு நேர்காணலில் இதனைப் பற்றி பேசியுள்ளார்.
Also Read:வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மை என்ன?
அதன்படி, எந்த வகையான பருப்பாக இருந்தாலும் நாம் 30 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். இதில் 6-7 கிராம் புரதம் இருக்கும். பருப்பின் வகை மற்றும் அது சமைக்கப்படும் விதத்தைப் பொறுத்து புரத அளவு மாறுபடலாம். அதாவது சமைக்கும்போது 10 முதல் 14 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனை உட்கொள்வதால் உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட போவதில்லை. காரணம் பருப்பு உங்கள் உடலுக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
Also Read:திருமணத்துக்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடை – காரணம் என்ன?
அதேசமயம் பருப்பில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் அவை எளிய கார்போஹைட்ரேட்டுகளை விட மெதுவாக ஜீரணமாகிறது. இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது. சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பருப்பை எடுத்துக் கொள்ளும்போது அது கார்போஹைட்ரேட்டுகள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு எனவும் மருத்துவர் டாக்டர் சீமா குலாட்டி கூறியுள்ளார். மேலும் பருப்பில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மனநிறைவு, பசியை நீக்குவது போன்றவற்றிலும் பங்களிப்பை அளிக்கிறது.