அதிகரிக்கும் கோடை வெப்பம்: மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?
Early Summer Heatwave in India: இந்தியாவில் கோடை வெப்பம் அதிகரிப்பதால் வெப்ப அலை அபாயம் உயர்ந்துள்ளது. மருத்துவர்கள் அதிக தண்ணீர் குடிக்கவும், மதிய வெப்பத்தை தவிர்க்கவும் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை என தெரிவிக்கப்படுகிறது. தோலை சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் கோடை வெப்பம் வழக்கத்தை விட முன்னதாகவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை போன்ற கடலோர நகரங்களில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் சேர்ந்து அதிகமான சூடான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் நீரிழப்பு, வெப்ப சோர்வு மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற உடல்நல பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, காலநிலை மாற்றம் மற்றும் நகர வளர்ச்சி காரணமாக வெப்ப அலைகள் அதிகமாகவும் தீவிரமாகவும் ஏற்படுகின்றன. நகரங்களில் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதால் சுற்றுப்புறத்தை விட நகரங்கள் அதிக வெப்பமாக மாறுகின்றன. உலக சுகாதார அமைப்பும் கடும் வெப்பம் மனித உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தான காலநிலை அபாயங்களில் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளது.
நீரிழப்பை தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்
மருத்துவர்கள் கூறுவதாவது, வெப்ப அலை காலங்களில் உடலை பாதுகாக்க மிக முக்கியமானது போதுமான அளவு திரவங்களை உட்கொள்வதுதான். தாகம் இல்லாத நேரத்திலும் தினம் முழுவதும் தண்ணீர் குடிப்பது அவசியம் என அவர்கள் கூறுகின்றனர். தண்ணீருடன் சேர்த்து தெங்காய்த் தண்ணீர், மோர் மற்றும் பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்கள் உடலில் இழக்கும் உப்புச்சத்தையும் திரவங்களையும் ஈடு செய்ய உதவுகின்றன. அதே நேரத்தில் அதிக கஃபீன், மதுபானம் அல்லது அதிக சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும். இவ்வகை பானங்கள் உடலில் நீரிழப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மதிய நேர வெப்பத்தை தவிர்ப்பது அவசியம்
கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்லாமல் இருப்பது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த நேரங்களில் வெளிப்புற செயல்பாடுகளை குறைக்க வேண்டும். அவசியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால், இலகுவான மற்றும் வெளிர் நிற பருத்தி உடைகள் அணிய வேண்டும். தொப்பி, குடை, கண்ணாடி போன்ற பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். மேலும், வெளியே செல்லும் போது தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். தோலை சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உணவு பழக்கமும் உடலை குளிர்விக்க உதவும்
கோடை காலங்களில் உணவு பழக்கமும் உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக தண்ணீர் சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலை குளிர்விக்க உதவுகின்றன. தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு மற்றும் முலாம் பழம் போன்றவை உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். அதே நேரத்தில் எண்ணெய் அதிகமான அல்லது மிக காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவ்வகை உணவுகள் உடலில் வெப்பத்தை அதிகரித்து செரிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
Also Read: கோடையில் உடலை குளிர்விக்கும் சிறந்த உணவுகள்… எதை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
வீட்டுக்குள் குளிர்ச்சியான சூழல் உருவாக்க வேண்டும்
வீட்டுக்குள் வெப்பத்தை குறைப்பதும் உடல்நல பாதுகாப்பிற்கு முக்கியமானது. விசிறி, ஏர் கூலர் அல்லது ஏர் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்தி வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். மதியம் நேரங்களில் திரைகள் அல்லது திரைச்சீலைகளை மூடுவதன் மூலம் சூரிய வெப்பம் வீட்டுக்குள் நுழைவதை குறைக்கலாம். கூடுதலாக குளிர்ந்த நீரால் குளிப்பது, முகத்தை அடிக்கடி கழுவுவது போன்ற எளிய முறைகளும் உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
வெப்ப நோய்களின் அறிகுறிகளை கவனிக்க வேண்டும்
வெப்பம் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகளை கவனிப்பது மிகவும் முக்கியமானது. தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி உணர்வு, அதிக வியர்வை, தசை வலி அல்லது குழப்பம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக குளிர்ச்சியான இடத்திற்கு செல்ல வேண்டும். தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் போன்ற திரவங்களை குடித்து ஓய்வு எடுக்க வேண்டும். அறிகுறிகள் அதிகரித்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக் என்பது அவசர மருத்துவ நிலை என்பதால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும்.