பெற்றோர்களே! குழந்தைகளுக்கு பேபி வைப்ஸ் பயன்படுத்துகிறீர்களா?
Baby Wipes Safe: குழந்தைகளுக்கு பேபி வைப்ஸ் பயன்படுத்தும்போது வாசனை இல்லாத, ரசாயனங்கள் குறைவாக உள்ள தரமான தயாரிப்புகளைத் தேர்வு செய்வது அவசியம். குழந்தையின் சருமத்தில் சிவப்புத் தன்மை, அரிப்பு அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் அந்த வைப்ஸைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புதிய வைப்ஸ்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் பரிசோதித்து, தொடர்ந்து பாதிப்புகள் இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவர்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, டயப்பர் மாற்றும்போதும், உணவு சாப்பிட்ட பிறகு முகம் மற்றும் கைகளைச் சுத்தம் செய்யவும் பலரும் பேபி வைப்ஸ்களைப் (Baby Wipes) பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் இவை பெரும்பாலான வீடுகளில் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன. இருப்பினும், குழந்தைகளுக்கு பேபி வைப்ஸ் பயன்படுத்துவது உண்மையில் பாதுகாப்பானதா என்ற கேள்வி பல பெற்றோருக்கு எழுகிறது.
Also Read: இந்தியவில் குழந்தைகளுக்கு மத்தியில் அதிகரிக்கும் எலும்பு பலவீனம்!
பேபி வைப்ஸில் உள்ள பொருட்களைக் கவனிக்க வேண்டும்
பேபி வைப்ஸ் வாங்கும்போது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்களின் பட்டியலைப் பெற்றோர்கள் முதலில் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, வாசனைக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சில குழந்தைகளுக்கு சரும எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, வாசனை இல்லாத (Fragrance-free) வைப்ஸ்களைத் தேர்வு செய்வது நல்லது. மேலும், பாதுகாப்புப் பொருட்கள் உள்ளிட்ட எந்தெந்த மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
வைப்ஸின் தரமும் முக்கியம்
பேபி வைப்ஸில் பயன்படுத்தப்படும் திரவம் மட்டுமின்றி, அதன் தயாரிப்புத் துணியின் தரமும் முக்கியமானது. குழந்தைகளின் மென்மையான சருமத்தில் பயன்படுத்துவதால், வைப்ஸ் மிருதுவாகவும் போதுமான உறுதியுடனும் இருக்க வேண்டும். மிகவும் மெல்லியதாக இருக்கும் வைப்ஸ் எளிதில் கிழிந்துவிடுவதுடன், சருமத்தை மீண்டும் மீண்டும் துடைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம். இதனால் குழந்தைகளுக்கு அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாங்கும்போது அதன் தரம் மற்றும் சருமப் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனை விவரங்களையும் கவனிக்க வேண்டும்.
சரும எரிச்சல் இருந்தால் கூடுதல் கவனம்
ஏற்கனவே குழந்தைக்கு டயப்பர் ரேஷ் அல்லது சருமத்தில் சிவப்புத் தன்மை இருந்தால், பேபி வைப்ஸ்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண நாட்களில் பாதிப்பில்லாத ஒரு தயாரிப்புகூட, பாதிக்கப்பட்ட சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். மேலும், இயற்கையான மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்பதற்காக மட்டுமே ஒரு பொருள் அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. குழந்தையின் சருமத்துக்கு எந்தப் பொருள் ஒத்துக்கொள்கிறது என்பதைக் கவனிப்பதே முக்கியம்.
பேபி வைப்ஸ் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டியவை
புதிய வகை பேபி வைப்ஸ்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, குழந்தையின் சருமத்தில் சிறிய பகுதியில் பயன்படுத்திப் பார்த்து அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்கலாம். மேலும், வைப்ஸ் பாக்கெட்டைத் திறந்த பிறகு சரியாக மூடி வைக்க வேண்டும். ஈரப்பதத்தை இழந்த வைப்ஸ்கள் சருமத்தைச் சுத்தம் செய்வதில் போதுமான பலனைத் தராது. குழந்தையைச் சுத்தம் செய்யும்போது அழுத்தமாகத் தேய்க்காமல் மென்மையாகத் துடைக்க வேண்டும்.
Also Read: இந்தியவில் குழந்தைகளுக்கு மத்தியில் அதிகரிக்கும் எலும்பு பலவீனம்!
மருத்துவரின் ஆலோசனை எப்போது தேவை?
குழந்தையின் சருமத்தில் ஏற்படும் சிவப்புத் தன்மை, அரிப்பு அல்லது டயப்பர் ரேஷ் தொடர்ந்து நீடித்தால் அலட்சியம் செய்யக்கூடாது. குறிப்பாக, சருமத்தில் புண்கள் அல்லது காயங்கள் ஏற்படுவது, பாதிப்பு அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும். பேபி வைப்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா இல்லையா என்பதைப் பொதுவாக முடிவு செய்வதைவிட, அதன் மூலப்பொருட்கள், தயாரிப்புத் தரம் மற்றும் குழந்தையின் சருமத் தன்மைக்கு ஏற்றதா என்பதைப் பார்த்துத் தேர்வு செய்வதே முக்கியம்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.