பைக்கில் சென்ற பெண்ணுக்கு கழுத்தில் திடீர் வெட்டு காயம்…உயிருக்கு எமனாகும் மாஞ்சா நூல்….அதிர்ச்சி வீடியோ!
Woman Neck Injured Cotton Thread: மாஞ்சா நூலால் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்து மற்றும் கையில் பலத்த வெட்டி காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், மக்கள் மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாஞ்சா நூலால் பாதிக்கப்பட்ட பெண்
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பேசும் ஒரு பெண், நான் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று எனது கழுத்தில் ஒரு நூல் மாட்டியது. உடனே, எனது கையால் அந்த நூலை அகற்ற முயன்றேன். ஆனால், அந்த நூல் எனது கழுத்து மற்றும் கையில் பலமாக அறுத்தது. இதனால், கழுத்து, கையில் பலத்த வெட்டு காயம் அடைந்து ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் என்னை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, எனக்கு கையில் தையலும், கழுத்தில் கட்டும் போடப்பட்டது. கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தால் எனது குரல் நாண் மிகுந்த சேதம் அடைந்திருக்கும். நான் வந்து கொண்டிருந்த மேம்பாலம் பகுதியில் ஒரு நபர் பறக்க விட்டிருந்த காத்தாடியால் (பட்டம்) இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. இதனால், பல்வேறு பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தாக உள்ளது.
கழுத்து – கையில் பலத்த வெட்டு காயம்
இந்த சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டதால் எனது உயிர் காப்பாற்றப்பட்டது. மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் நான் உயிர் பிழைத்திருந்தாலும், எனது கழுத்து மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, மாஞ்சா நூலால் நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். இதே போல வருங்காலங்களில் வேறு நபர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சட்டவிரோதமாக மாஞ்சா நூலால் காத்தாடிகள் பறக்க விடும் நபர்கள் மீது காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது.. இலக்கை அடையவில்லை” இஸ்ரோ தலைவர் தகவல்..
சட்டவிரோதமான மாஞ்சா நூல் விற்பனை
மேலும், பொதுமக்களும் சட்டவிரோதமான மாஞ்சா நூலை பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த காணொலி மூலம் பொதுமக்கள் மற்றும் மாஞ்சன் நூலை பயன்படுத்தும் நபர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்று அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மாஞ்சா நூலானது பருத்தி துணியால் செய்யப்பட்டு, அதில் கண்ணாடி துகள்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு சட்டரீதியாக விற்பனை செய்யப்படுகிறது.
மாஞ்சா நூலால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்கள்
இந்த நூல்கள் மூலம் காத்தாடி திருவிழாவின் போது, எதிர் போட்டியாளர்கள் பறக்க விடும் காத்தாடிகளின் நூல்களை அறுப்பதற்காக இந்த மாஞ்சா நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும், இந்த மாஞ்சா நூலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் பைக்கில் சென்ற நபரின் கழுத்தில் மாஞ்சா நூல் வெட்டி பலத்த காயம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பட்டம் விடும் விழாவில் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ்.. உடனிருந்து பட்டம் விட்ட பிரதமர் மோடி!