பத்மநாபசாமி கோவிலில் கேமரா கண்ணாடியுடன் வந்த பக்தர் – அதிர்ச்சி சம்பவம்
Padmanabhaswamy Temple : கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோவிலில் குஜராத்தை சேர்ந்த பக்தர் குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது அவர் கேமராவுடன் கூடிய மெட்டா ஸ்மார்ட் கிளாஸை அணிந்திருந்தார். இதனைப் பார்த்த கோவில் ஊழியர்கள் அவரை தடுத்துநிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம், ஜூலை,07 : கேரளாவின் (Kerala) புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசாமி கோவிலில், (Sree Padmanabhaswamy Temple) கோவில் விதிமுறைகளை மீறி கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்து வந்த குஜராத் பக்தர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திர ஷா (வயது 66). இவர் தனது மனைவி, சகோதரி மற்றும் குடும்பத்தினருடன் இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது அவர் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து வந்திருப்பதைப் பார்த்த கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அவரது கண்ணாடியில் கேமரா இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் கோவில் விதிகளை மீறியதாக அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சம்பவம் எப்படி நடந்தது?
கடந்த ஜூலை 6, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, சுரேந்திர ஷா தனது குடும்பத்துடன் கோவிலுக்குள் நுழைய முனைந்த போது, அவரது கண்ணாடியிலிருந்து வெளிச்சம் வருவதை, பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக சுரேந்திர ஷாவை நிறுத்தி, அவரது ஸ்மார்ட் கண்ணாடியை சோதனை செய்தனர். அதில் கேமரா பொறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது கோவிலின் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சுரேந்திர ஷாவின் செயல் கோவில் கட்டுப்பாடுகளை மீறும் செயல் என்பதால், உடனடியாக போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டது.
வழக்குப் பதிவு
திருவனந்தபுரம் போலீசார், கோவிலின் சட்டப்பூர்வ உத்தரவை மீறுதல் எனும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 223 (BNS Section 223)-ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு எதிராக நோட்டீஸ் வழங்கி அவரது குடும்பத்துடன் மீண்டும் குஜராத்திற்கு செல்ல அனுமதி வழங்கினர். விசாரணையில் அவர் ஆபத்து விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்
சமீபத்தில் இந்த கோவிலில் 270 வருடங்களுக்கு பின் மிகப்பெரிய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் 300 ஆண்டுகளுக்கு பழைய விஷ்வக்சேனரின் சிலை மறுஅமைப்பும் சடங்குகளும் நடைபெற்றன. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம், கோவில்களில் தனிப்பட்ட முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது மீதான கட்டுப்பாடுகள் எவ்வளவு கடுமையானவை என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது. பக்தர்கள், எந்த கோவிலுக்கு சென்றாலும் அதன் கோவிலின் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்பது இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது.